நடிகர் விஜய் தேர்தல் களத்தில் குதிப்பது எப்போது; வெளியானது முக்கிய தகவல்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 129 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கம் ஆதரவுடன் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பங்குபெற்று வெற்றி பெற்ற 120 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் சந்தித்த நடிகர் விஜய் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இரண்டரை மணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்ற நிலையில் , சந்திப்பின் நிறைவில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க மாநிலச் செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தல்களில் பங்கேற்பது குறித்து கூடிய விரைவில் விஜய் அறிவிப்பார். வாக்களித்தவர்கள் கேட்டால் சின்ன விஷயம் என்றாலும் செய்து கொடுக்க வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார் " என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், " ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 129 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 2 ஊராட்சி மன்ற தலைவர் , 12 ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் வெள்ளிக்கிழமை தேர்வாகியுள்ளனர்” என தெரிவித்தார்.
ALSO READ | நீதிபதியின் கருத்துகள் புண்படுத்திவிட்டன - நடிகர் விஜய்
வெற்றி பெற்ற நிர்வாகிகளிடம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மத்திய , மாநில அரசுகள் மூலம் நிறைவேற்றுமாறு விஜய் உத்தரவிட்டுள்ளார். விஜய் அனைவருடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டதோடு, தனித்தனியே சால்வை அணிவித்து , அவர்களது தேர்தல் பணி குறித்து கேட்டறிந்து வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
புஸ்சி ஆனந்த் இது குறித்து மேலும் கூறுகையில், அரசியல் தொடர்பாக விஜயின் முடிவுதான் எங்கள் முடிவு என்றும், எங்களுக்கு ஒரே தலைவர் விஜய். அவர் சொல்வதை செயல்படுத்தவோம் எனவும் கூறினார்.
மேலும், “மக்களுக்கான சில திட்டங்களை நிறைவேற்றுமாறு கூறியுள்ள நடிகர் விஜய் கூறியுள்ளார். பொதுமக்களிடம் விஜய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. வெற்றி பெற்ற நிர்வாகிகள் தவறு செய்தால் கண்டிப்பாக அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் ” எனவும் புஸ்சி ஆனந்த் கூறினார்.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பது தொடர்பாக விஜய் கூடிய விரைவில் அறிவிப்பார் " என்றும் அவர் கூறினார்.