3 ஆண்டுக்கு பிறகு.. உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்..!! விரைவில் தேர்தல்!!
இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் உள்ளாச்சி தேர்தலை நடத்தி முடிக்க தமிழக தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
சென்னை: கடந்த 2016 ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் நிறைவு பெற்றது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. ஆளும் அதிமுக அரசும் பல காரணங்களை கூறி, உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தள்ளிபோட்டுக்கொண்டே வந்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. அங்கேயும் விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் கூறிவந்தது ஒழிய தேர்தலை நடத்த வில்லை.
கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் தேங்கியதால், மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். அதேவேளையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியும் நிறுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் உள்ளாட்சி நிதியை வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தேர்தலை நடத்தாமல் நிதி வழங்ககப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மேற்கொண்டது. தற்போதைய தகவலின் படி, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கும் மின்னணு எந்திரம் மூலமும், ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குச்சீட்டு மூலமும் ஓட்டுப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுக்குறித்து தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், விரைவில் தமிழகத்தில் உள்ளாச்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்க்கான தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்து விட்டது எனக் கூறினார்.