பருவமழை தொடங்கும் முன்பே சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எதையுமே எடுக்காமல், கமிஷன் கலாச்சாரத்திலேயே மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


குழந்தைகளும், பெரியவர்களுமாக ஒவ்வொரு நாளும் டெங்குக் காய்ச்சலுக்கு மடிந்து மாய்ந்து கொண்டிருப்பதை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு கல்மனதுடன் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.


ஒவ்வொரு ஆண்டும் டெங்குக் காய்ச்சல் வந்தாலும், கடந்த ஆண்டு மட்டும் 158-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பிறகும், இந்த ஆண்டு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், தங்கள் அரசை எப்படியாவது காப்பாற்றிக் கொள்வதிலும், கமிஷன் - கலெக்‌ஷனில் காலத்தைச் செலவிடுவதிலும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவுமே முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே நாளில் தமிழகம் முழுவதும் மூன்று பேர் மரணம், ஐந்து பேர் மரணம் என்றெல்லாம் வரும் அதிர்ச்சிச் செய்திகள் மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது.


டெங்குக் காய்ச்சல் பற்றி ஆய்வு செய்ய 2017-ல் தமிழகம் வந்த எய்ம்ஸ் பேராசிரியர் அஸ்தோஸ் பிஸ்வாஸ் தலைமையிலான மத்திய கமிட்டி, 2011 முதல் 2017 வரை 54 ஆயிரம் பேரும், 2017-ல் மட்டும் 23035 பேரும் பாதிக்கப்பட்டார்கள்” என்று “பகீர்” தகவல்கள் அடங்கிய அறிக்கை அளித்தும், அ.தி.மு.க அரசு இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறது. பருவமழை தொடங்கும் முன்பே சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எதையுமே எடுக்காமல் - கமிஷன் கலாச்சாரத்திலேயே மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறது.


பிஞ்சுக் குழந்தைகளின் மரணங்களைக் கண்டு கூட இந்த அ.தி.மு.க அரசு மனம் இரங்கவில்லை - மக்களைப் பாதுகாக்க விழித்தெழுந்து உணர்ச்சியோடு பணியாற்றவில்லை என்பது வெட்கக் கேடானது - மிகுந்த வேதனைக்குரியது.


மற்றவற்றைப் போலவே மக்களின் உயிர்ப்பாதுகாப்பு விஷயத்திலும் அ.தி.மு.க அரசு எப்போதும்போல் தூங்கிக் கொண்டிருக்காமல் உடனடியாகத் தூக்கத்தைக் கலைத்து விழித்தெழுந்து உருப்படியாகப் பணிசெய்ய முன்வர வேண்டும். மாநிலத்தில் “மெடிக்கல் எமெர்ஜென்ஸி” அறிவித்து, இனி ஒரு டெங்கு மரணம் கூட நிகழ்ந்து விடாத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தரமான சிகிச்சை வழங்கிட அ.தி.மு.க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.