புதிய திட்டங்களுடன் வெளியிடப்பட்டது அ.தி.மு.க.தேர்தல் அறிக்கை- பார்ப்போம்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே 16ம் தேதி நடைபெறயுள்ளது. அ.தி.மு.க.வை தவிர அனைத்து கட்சிகளும் தமது தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இந்தநிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிரச்சாரக் கூட்டதின் போது முதல்வர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டார். அதில் தொலைநோக்கு வளர்ச்சி திட்டங்களும் இடம் பெற்று இருந்தன. பெண்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவசதிட்டங்களும் இருந்தன.
தேர்தல் அறிக்கையின் விவரங்கள்:-
மின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு தடையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் மூலம் 100 யூனிட் வரை மின்கட்டணம் ரத்து செய்யப்படும். இதன்மூலம் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் பயன் அடைவார்கள்.
கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன் அனைத்தும் தள்ளுப்படி செய்யப்படும். சரியான காலத்தில் கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.20,787 கோடி அளவுக்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட பயிர் கடன் ரூ.9 ஆயிரத்து 164 கோடி தான்.
சூரிய சக்தியால் இயங்கும் விவசாய மோட்டார் பம்பு செட்டுகளுக்கு எண்பது சதவீத மானியம் வழங்கப்படும். இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்படும். விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த திட்டமும் அதாவது டெல்டா மற்றும் மற்ற விவசாயப் பகுதிகளில் மீத்தேன் மற்றும் இதர எரிவாயுத் திட்டம் போன்றவை அனுமதிக்கப்படமாட்டாது. விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. மேம்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். அதிக எண்ணிக்கையிலான சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு விவசாய நலனை மேம்படுத்தப்படும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். நெல் மற்றும் கரும்புக்கான விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும்.
தமிழ்நாட்டில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. வணிகர் நலனுக்கு அரசு வழங்கும் தொகுப்பு நிதி 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். எந்தவித இடையூறுகள் இல்லாமல் வியாபாரம் செய்வதற்கான அணைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் அமைத்து தொழில் முதலீடுகள் அதிக அளவில் ஏற்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொழில் துறை உற்பத்தி மண்டலங்கள் அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கனரக எந்திர உற்பத்தி மையம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மேலும் அதிகமாய் தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும்.
புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு இயக்கப்படும். மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதி கிடைக்க வழி செய்யப்படும். சில மாவட்டங்களில் மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்க படும்.
முதல் அமைச்சரின் பசுமை வீடுகள் திட்டம் மற்றும் தொகுப்பு வீடுகள் திட்டம் என இதர திட்டங்கள் மூலம் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பழுதடைந்திருக்கும் வீடுகள் பழுதுபார்க்கப்படும். நகரங்களில் குடிசைகளில் வாழும் குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி குடுக்கப்படும். குடிசைப் பகுதிகள் நகரங்களாக மாற்றப்படும். அனைத்து வீட்டுமனைகான ஒப்புதல் 45 நாட்களுக்குள் வழங்கப்படும்.
11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா லேப்-டாப் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மேலும் கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதியும் மாணவர்களுக்கு வழங்கப்படும். பள்ளிகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படடு பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மருத்துவக் கல்லூரி என ஐந்து மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும்.
அரசின் இ-சேவை மையங்கள் மூலம் அனைத்து சேவைகள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டணமில்லா இணையதள வசதி செய்து தரப்படும். தமிழ் நாட்டில் பல இடங்களில் இலவச வை-பை வழங்கப்படும். வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும். தொடக்கப் பள்ளி குழந்தை களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
அரசின் கேபிள் டி.வி. பெற்றுள்ளவர்களுக்கு செட்டாப் பாக்ஸ் இலவசமாகவும் மேலும் குறைந்த கட்டணத்தில் தரமான சேவை வழங்கப்படும்.
தமிழ் நாட்டின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைபேசி இலவசமாக வழங்கப்படும். ஆவின் பால் லிட்டரருக்கு ரூபாய் 25 என குறைந்த விலையில் வழங்கப்படும். மகளிருக்கு பேறுகால விடுமுறை 9 மாதங்களாக உயர்த் தப்படும். கருவுற்ற தாய்மார்களுக்கு நிதியுதவி 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். திருமண உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம் 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட முன்பணமாக ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்.
மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகைகள் 5,000 ரூபாயாக உயர்த்தப்படும். மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம். பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மதம் மாறிய ஆதி திராவிட மற்றும் பழங்குடியினரையும் நரிக்குறவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருநங்கையர்-திருநம்பியர் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு ரூ.500 மதிப்பில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கைத்தறி துணிகள் வாங்கிக்கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கிப்ட் கூப்பன் வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்களாக உயர்த்தப்படும்.
இருசக்கர வாகனம் வாங்க மானியம் 50 சதவீதம் மகளிர்களுக்கு வழங்கப்படும். மக்கள் அனைவரும் அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும். வங்கிகளுடன் இணைந்து சுலபத் தவணையில் செலுத்தக் கூடிய வட்டியில்லாக்கடன் வழங்கப்படும். இந்த அம்மா பேக்கிங் கார்டை பயன்படுத்தி வங்கிப் பரிவர்த்தனைகளை செய்யலாம். அரசின் அனைத்து சேவைகளையும் பெறலாம்.