தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி, முதல்வர் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக புகார் அனுப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து மத்திய தேர்தல் ஆணையத்துக்கு, புதுச்சேரி அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் அனுப்பிய புகார் மனு:-


மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் நாடு முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 
இந்த விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். இலவசங்கள், நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், புதுவையில் முதல்வர் நிவாரண நிதி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் முன் தேதியிட்ட காசோலைகள் புதுவையில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத நிலையிலும், இந்த காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. நிவாரண நிதி கணக்கில் தேவையான நிதி வந்தவுடன் இந்த காசோலைகளை யாருக்கும் தெரியாமல் வங்கியில் செலுத்தி பணம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் நிவாரண நிதி வழங்குவதை யாரும் தடுக்க முடியாது. ஆனால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு நிவாரண நிதி வழங்குவது நிறுத்தப்பட வேண்டும்.


ஆனால், புதுவை முதல்வர் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி நிவாரண நிதியை வழங்கி வருகிறார். எனவே, தேர்தல் ஆணையம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 



 



இவ்வாறு புதுச்சேரி அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் புகார் எழுப்பியுள்ளனர்.