மத்திய அரசின் அனைத்துப் போட்டித் தேர்வுகளும் தமிழில் நடத்தப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை புறக்கணித்து விட்டு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அஞ்சல்துறை பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். மாநில மொழி மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை உணர்ந்து எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது.


நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுதொடர்பான உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்து பேசிய மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதை அறிவித்ததுடன், அனைத்து மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு மீண்டும் இத்தேர்வு நடத்தப்படும் என்று கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன் இத்தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்ட போது, அனைத்து மாநில மொழிகளிலும் அஞ்சல்துறை பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 14&ஆம் தேதி போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், அதற்கான மாநில மொழி மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுத தயாராகி வந்த நிலையில், அதற்கு 3 நாட்கள் முன்பாக 11&ஆம் தேதி மாநில மொழிகளில் தேர்வு எழுத முடியாது என்றும், ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் தான் தேர்வு எழுத முடியும் என்றும் அறிவித்தது மிகப்பெரிய அநீதி ஆகும்.


இந்த அநீதிக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன்முதலில் குரல் கொடுத்தது. அதைத் தொடர்ந்து தான் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்கள் குரல் கொடுத்தனர். தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்தே  தொலைத்தொடர்புத்துறை அதன் தவறுகளை உணர்ந்து கொண்டு அஞ்சல்துறை போட்டித்தேர்வுகளை ரத்து செய்திருக்கிறது. அந்த வகையில் இது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றியில்  பாட்டாளி மக்கள் கட்சிக்கு கூடுதல் பங்கிருக்கிறது. மாநிலங்களவையில் இச்சிக்கல் எழுப்பப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று, இச்சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கூறிய அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பணி பாராட்டத்தக்கது.


இந்தியா என்பது ஒற்றை நாடு அல்ல. அது பல்வேறு மொழிகள் பேசும், பல்வேறு கலாச்சாரங்களைக் கடைபிடிக்கும் மக்களைக் கொண்ட பல்வேறு நிலப்பகுதிகளின் ஒன்றியம் ஆகும். இதை உணர்ந்து மத்திய அரசு செயல்பட்டால் தான் அமைதியும், ஒற்றுமையும் பெருகும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அஞ்சல்துறை தேர்வுகளில் நடந்த குழப்பங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இனி நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகளையும் தமிழில் நடத்த அரசு முன்வர வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.