முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் சனவரி 3 ஆம் தேதி முதல் சனவரி 10 ஆம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி எனவும், திருவாரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் யாரை நிறுத்தலாம்? என்று அனைத்து கட்சிகளும் ஆலோசனை செய்து வருகிறது. தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பது குறித்து மவுனம் காத்து வருகிறது. ஆனால் புதிய கட்சிகளும், சிறிய கட்சிகளும் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. மேலும் நேற்று முதல் வேட்புமனு தொடங்கியதால், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.


ஏற்கனவே நாம் தமிழர் கட்சி, திருவாரூர் தொகுதியில் தனித்துப் போட்டியிடுவோம். யாருடனும் கூட்டணி கிடையாது எனக்கூறி, அந்த தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்து உள்ளது. 


இந்தநிலையில், திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தங்கள் வேட்பாளரை குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடுவார். எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.