`அம்மா திருமண மண்டபம்` முதல்வர் ஜெ., அறிவிப்பு
ஏழை மக்கள் பயன் அடையும் வகையில்‘அம்மா திருமண மண்டபங்கள்’ கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:- அனைத்து தரப்பு மக்களும் குடியிருப்பதற்கு சொந்த இல்லம் பெற்றிட வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் எனது தலைமையிலான அரசு பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நடப்பு நிதியாண்டில், 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் 50,000 குடியிருப்புகள் கட்ட நான் உத்தரவிட்டுள்ளேன்.
ஏழை எளிய மக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்த வாடகையாக அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் ‘அம்மா திருமண மண்டபங்கள்’ கட்ட நான் உத்திரவிட்டுள்ளேன்.
இந்தத் திட்டம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் ஆகியவை மூலம் செயல்படுத்தவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இத்திட்டமானது 11 இடங்களில் 83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இந்த திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.