தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை குறித்து புதுவை மாநில ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டுள்ள கருத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., "தமிழக மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்து இருப்பது கண்டனத்திற்குரியது. ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல.


அப்படி ஏதாவது கேட்க நினைத்தால் அவர் பதிவிட்டுள்ளபடி‘நிர்வாக திறனற்ற' இந்த ஆட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்து வருபவர்களிடம் கேள்வி கேட்கட்டும்.அம்மா என்கிற இரும்புப் பெண்மணி ஆண்ட தமிழகத்தை பிறர் கேலி பேசுகிற நிலைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் ஆளாக்கிவிட்டது வேதனை அளிக்கிறது."



முன்னதாக தமிழக தலைநகரான சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து, புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்தருந்தார். அதில் தமிழகத்தில் நடைபெற்று வரும் மோசமான ஆட்சியே, தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார்.


மேலும் இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தவிர மக்களின் சுயநலமும், மோசமான அணுகுமுறையும் கூட தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் என காட்டமாக விமர்சித்திருந்தார். தமிழக அரசு பற்றியும் தமிழக மக்கள் பற்றியும் கிரண்பேடியின் விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்நிலையில் தற்போது கிரண்பேடியின் இந்த கருத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களும் தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.