முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் எம்.பி.ஏ.,எம்.சி.ஏ. மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான டான்செட் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கவுன்சிலிங் முறையில் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான தேர்வு மற்றும் கவுன்சிலிங் அண்ணா பல்கலைக்கழகமே கடந்த ஆண்டு வரை நடத்தி வந்தது. இதனிடையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், உயர்கல்வித் துறைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கலந்தாய்வு மற்றும் டான்செட் கலந்தாய்வை நடத்த முடியாது என அறிவித்துவிட்டது. 


அதைத்தொடர்ந்து, முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக வளாகங்களுக்கு மட்டும் ஏயுசிஇடி (AUCET) என்ற தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வேளியிட்டது. இதனால், மற்ற கல்லூரிகளில் சேர டான்செட் (TANCET), தேர்வும், அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர ஏயுசிஇடி தேர்வு எழுத வேண்டிய சூழல் மாணவர்களுக்கு உருவானது. இதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், ஏயுசிஇடி தேர்வை ரத்து செய்துவிட்டு  எம்.பி.ஏ, எம்.சி.ஏ., மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்த உயர்கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது. 


இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கை, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பக் கழகம் நடத்தும் நிலையில், டான்செட் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்த உயர் கல்வித்துரை பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் இதுவரை எந்தவித பதிலும் தெரிவிக்காத நிலையில், இதுதொடர்பாக  அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அதன்பிறகே  டான்செட் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவது குறித்த முடிவு தெரியும் என்று கூறப்படுகிறது. 


அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் உயர்கல்வித் துறைக்கு இடையே நிலவி வரும் குழப்பம் தமிழக மாணவர்களின் நலன்களில் சிக்கல்களை உருவாக்கி வருகிறது.