5ஜி ஏலத்தில் ஊழலா?... அண்ணாமலை சொல்வது என்ன
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
5ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என மத்திய அரசு சொன்ன நிலையில், ரூ.1½ லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போய் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆ.ராசா வலியுறுத்தினார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆ.ராசாவின் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “2008ல் 2ஜி ஊழல் என்பது 2 விஷயங்கள் அடிப்படையாக இருந்தது. 2001ல் இருந்த அடிப்படை விலையை 2008-க்கு ராசா பயன்படுத்தினார். இரண்டாவது விண்ணப்பத்தில் குளறுபடி. அப்போதெல்லாம் ஏலம் நடக்கும்போது லைசென்சும் ஸ்பெக்ட்ரமும் சேர்ந்து கொடுப்பார்கள். நேற்று நடந்த ஏலம் என்பது லைசென்ஸ் கிடையாது, ஸ்பெக்ட்ரம் மட்டுமே. 2008ல் நடந்தது லைசென்சும் ஸ்பெக்ட்ரமும் இணைந்த நடைமுறை. இப்போது லைசென்சை தனியாக வாங்கிவிட்டு, ஸ்பெக்ட்ரமை தனியாக ஏலம் விடுகிறார்கள்.
அதனால் ராசா, 2009ல் முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமை என்ற முறையை கொண்டு வந்தார். அவரே ஒரு தேதியை முடிவு செய்து, நாளை காலைக்குள் யாரெல்லாம் அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பம் தாக்கல் செய்கிறார்களோ, அவர்களின் மனுக்களை பரிசீலனை செய்வோம் என்று கூறி உள்ளனர். குறிப்பாக சில குறிப்பிட்ட கம்பெனிகளுக்கு மட்டும் முன்பே தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் லைசென்சுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதனால்தான் சிபிஐ விசாரணை நடத்தியது. லைசென்ஸ் எடுத்த ஒரு கம்பெனி கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு கம்பெனி மூலமாக பணம் அனுப்பியிருந்தார்கள்.
மேலும் படிக்க | இந்தியாவில் பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்பா?... அண்ணாமலை விளக்கம்
சிபிஐ விசாரணை ஆரம்பித்ததும் கலைஞர் தொலைக்காட்சி அந்த பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு, அந்த கம்பெனியிடம் இருந்து கடனாக வாங்கினோம், எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்று பொய் சொல்லியிருந்தார்கள். அதன்பின் சிஏஜி தலைவர் வினோத் ராய் விசாரணை நடத்தி, 2001 மற்றும் 2008 விலை நிலவரத்தை ஒப்பிட்டு பார்த்து, அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் கொடுத்தார். அதன்பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் 2012ல் 2ஜி ஏலம் நடந்தது. முறைகேடு செய்து கொடுக்கப்பட்ட லைசென்சை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து இந்த ஏலம் நடந்தது. அப்போது மன்மோகன் சிங் அரசு, மத்திய அரசுக்கு இதன்மூலம் ரூ.28 ஆயிரம் கோடி வருமானம் வரும் என்று தெரிவித்தது. ஆனால் மத்திய அரசுக்கு வந்த வருமானம் ரூ.9400 கோடி.
பாஜக அரசு வந்தபின்னர் 2015ல் ஏலம் நடத்தப்பட்டது. 2ஜி, 3ஜி, எக்பேண்டட் பேண்ட்வித் கொடுத்தார்கள். இதில் ரூ.1 லட்சத்து 9000 கோடி கிடைத்தது. 2016ல் 2ஜி, 3ஜி, 4ஜி ஏலம் நடந்தது. இதில் ரூ.65789 கோடி வருமானம் கிடைத்தது. 2021ல் 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி ஏலம் நடந்தது. அதிலும் 700 மெகா ஹெர்ஸ், 2500 மெகா ஹொசை விற்க முடியவில்லை. அரசுக்கு வந்த வருமானம் ரூ.77814 கோடி. 2015ல் ஒரு லட்சத்து 9000 கோடியும், 2021ல் 4ஜி, 5ஜி வந்தபோது வருமானம் குறைந்திருக்கிறது.
மேலும் படிக்க | இந்தியாவில் குரங்கு அம்மை பீதி: 9 ஆக உயர்ந்த எண்ணிக்கை, அவசர கூட்டத்துக்கு அழைப்பு
மொத்த அலைக்கற்றை ஏலத்தின் மூலம் ரூ.4.30 லட்சம் கோடி வருவாய் வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அலைக்கற்றை முழுமையாக விற்கவில்லை. கொஞ்சம்தான் ஏலம் விட்டிக்கிறோம். அடுத்த ஏலத்தில் மீதம் ஏலம்விடப்படும். மொத்த எதிர்பார்ப்பு ரூ.4.30 லட்சம் கோடி, அதில் இப்போது ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வந்துள்ளது. 2012ல் காங்கிரஸ் ஆட்சியில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் நடந்த ஏலத்தில் 28000 கோடிக்கு வெறும் 9400 கோடி வந்தது. ஏனென்றால் 5ஜி என்பது வளர்ச்சியடையாத தொழில்நுட்பம். நாட்டில் பயன்பாட்டில் உள்ள செல்போன்களில் வெறும் 7 சதவீத செல்போன்களில் மட்டுமே 5ஜி வசதி உள்ளது. 97 சதவீத செல்போன்களில் அந்த வசதி இல்லை. இப்போது நடந்த ஏலம் என்பது 5ஜி அலைக்கற்றைக்கு மட்டுமல்ல, 2ஜி, 3ஜி, 4ஜி அலைக்கற்றைக்கும் சேர்த்துதான் நடந்தது. இதில் 5ஜி மட்டும் கொடுக்கவேண்டும் என்பது 700 மெகா ஹெர்சில் மட்டுமே சாத்தியம். அது நேற்றுதான் முதன் முதலில் விற்கப்பட்டுள்ளது. மூன்று முறை நடந்த ஏலத்தில் யாரும் வாங்கவில்லை. ஏனென்றால் எல்லோரிடமும் அதற்கான தொழில்நுட்பம் இல்லை” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ