எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என அதிமுக அமைச்சர்கள் கூறியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், ஒரு வாரத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும் என்றும், இதில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கலாம் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. 


ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளான தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.


இந்நிலையில், இன்று இரவு 8 மணி அளவில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பொன்னையன் கூறியது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் எனக் கூறினார்கள்.