தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் வல்லடிகார கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும்  இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 


இப்போட்டியில் தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 700 காளைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.


போட்டியின் துவக்கத்தில், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் முன்னிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறைகள் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கொடியசைக்க போட்டி தொடங்கியது.


போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்களையும் மற்றும்  வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளையும் வெற்றி பெற்றவர்களாக அறிவித்து அவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள்,  மொபைல் போன்,  டிவி, கட்டில், பீரோ, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. 


போட்டியின்போது மாடுகள் முட்டியதில் போட்டியை காணவந்த பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.