ஆட்டு மந்தைகளை போன்று பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ பறிமுதல்
தென்காசி அருகே அளவுக்கு அதிகமான பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2-ம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த விபத்தால் மாநிலம் முழுவதும் பள்ளி வாகனங்களின் இயக்கம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.
பள்ளி வாகனங்களில் சினிமா பாடல்களை ஒலிக்க விட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது, பள்ளி வாகனத்தில் மாணவர்களை இருப்பிடத்திலிருந்து அழைத்து வரும்போது உதவியாளர் ஒருவர் அருகில் இருக்க வேண்டும் என்றும் மாணவர்களை பாதுகாப்பாக இறக்கி நான்கு புற ரடயர்களில் மாணவர்கள் இல்லை என்பதைனை உறுதி செய்ய வேண்டும், அளவுக்கு அதிகமான மாணவர்களை வாகனங்களை ஏற்றி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு உத்தரவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் விதித்திருந்தது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆவுடையானூர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்வதாக புகார் எழுந்தது. மேலும், இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியானது. எல்.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் புத்தகப்பை சுமைகளுடன் போதாக்குறைக்கு உணவு பை உள்ளிட்டவற்றுடன் ஆட்டோவில் ஏறி இறங்குவதற்குள் பலர் விழுந்து எழுவதை காணமுடிந்தது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரில், விதிமுறைகளை மீறி அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி சென்ற ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.