சென்னையில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால்,அதனை சமாளிக்க வீடுகளில் ஷவரில் குளிக்க வேண்டாம் என சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழவரம், பூண்டி, மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பூண்டியில் 133 மில்லியன் கன அடியும், புழலில் 37 மி.க.அடியும், சோழவரத்தில் 4 மி.க.அடியும், செம்பரம்பாக்கத்தில் 1 மி.க.அடி உள்ளதாகவும் சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 


மேலும் அவர் கூறுகையில், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு 830 மில்லியன் லிட்டர் தினமும் தேவைப்படுவதாகவும், தற்போது 550 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 


எனவே, வீடுகளில் அனைவரும் ஷவரில் குளிப்பதை நிறுத்தினால் தண்ணீரை வீணாக்குவதை கட்டுப்படுத்த முடியும் எனவும், குடிநீரை பயன்படுத்தி கார்களை கழுவுவதை நிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் தோட்டங்களுக்கும் குடிநீரை பயன்படுத்தாமல், கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு கலந்த தண்ணீரை பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.