அயோத்தி தீர்ப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது: வேல்முருகன்
உலகம் இதுவரை காணாத ஓர் அடாவடி வழக்கே அயோத்தி பாபர் மசூதி வழக்கு... அதே சமயம், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானதே வழக்கின் தீர்ப்பும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: உலகம் இதுவரை காணாத ஓர் அடாவடி வழக்கே அயோத்தி பாபர் மசூதி வழக்கு... அதே சமயம், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானதே வழக்கின் தீர்ப்பும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துள்ளது. அதுக்குறித்து சமூக வலைதளத்தில், அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது,
பாபர் மசூதி அமைந்த அந்த அயோத்தி நிலம் சர்ச்சைக்குரிய இடம் என்று சொல்லும் உச்ச நீதிமன்றம், அப்படிச் சொல்ல எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. ஆக, முதலிலேயே வழக்கில் சறுக்கல், திசைமாற்றல்.
அயோத்தி நிலத்தை இந்து அமைப்புகளுக்கு நிபந்தனையுடன் வழங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், 3 மாதங்களுக்குள் ஓர் அறக்கட்டளையை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு அந்த அறக்கட்டளை கோயில் கட்டும் பணியை நிர்வகிக்க வேண்டும் என்கிறது!
இதில் நிபந்தனை ஏன்? நிலத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பது என்றால் நிபந்தனை தேவையில்லையே!
பாபர் மசூதி கட்டுவதற்கு முன் அங்கு கோயில் இருந்தது என்று உறுதி செய்யப்படவில்லை என்று சொல்லும் நீதிமன்றம், தொல்லியல் துறையை துணைக்கழைக்கிறது. அதுவும், மசூதியில் காணப்பட்ட கல்வெட்டுகள்படி, 1528 - 1530 காலக்கட்டத்தில் ராம்கோட் மொகல்லாவில் மலைக்குன்றில் பாபர் உத்தரவின் பேரில் அவருடைய ஆளுநர் மீர் பாகி என்பவரால் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது.
ஆனால் பாபர் அல்லது பாகி இந்த நிலத்தை எப்படி வசப்படுத்தினார்கள் என்பது பற்றியும், மசூதி கட்டுவதற்கு முன்பு அங்கே என்ன இருந்தது என்பது பற்றியும் எந்த ஆவணங்களும் கிடையாது என்றுதான் சொல்கிறது. அப்படியிருக்க நீதிமன்றம், "இந்துக்களுக்கே பாபர் மசூதி நிலம்" என்று தீர்ப்பளித்ததேன்?
கோயில் கட்டுமாறு அறக்கட்டளையை உருவாக்க நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது ஏன்? அயோத்தியை உள்ளடக்கிய தாலுகா அலுவலகம், மாவட்ட அலுவலகம் எதனிடமும் நீதிமன்றம் உத்தரவிடாதா? இல்லை உத்தரப் பிரதேச அரசிடம் உத்தரவிடாதா? மிக மிகச் சாதாரண ஒரு நிலப் பிரச்சனையை - சிவில் மேட்டரை ஒட்டுமொத்த தேசத்தின் பிரச்சனையாக்கிய ஆர்எஸ்எஸ் - பாஜகவைக் கண்டிக்காமல், அதன் போக்கிற்கு இசைந்தே, மத்திய அரசையே அறக்கட்டளையை உருவாக்கச் சொல்வது நியாயமா?
ஆக எந்த வகையில் பார்த்தாலும் இந்த வழக்கையும் சரி; அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பையும் சரி சகிக்க முடியவில்லை.
இவ்வாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் கூறியுள்ளார்.