சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பொறியியல் முதலாம் ஆண்டு தத்துவவியல் பாடத்தில் நான்கு இந்து வேதங்கள் மற்றும் பகவத்கீதை போன்ற புராணங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், விருப்பட்டால் பகவத் கீதையை படிக்கலாம், அது விருப்பப் பாடமாக மட்டும் இருக்கும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:


அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், தத்துவ இயல் பாடத்தின் கீழ் பகவத் கீதையை ஒரு பாடமாகப் படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து இருப்பது மிகப்பெரிய தவறாகும். பொறியியல் மாணவர்கள் பகவத் கீதையைப் படிக்க வேண்டிய அவசியம் என்ன? சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிக்கும் அதே குறிக்கோளோடு, அனைத்தையும் இந்துத்துவா மயமாக்கும் கொடிய நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது. இது திட்டமிட்ட இந்துத்துவா திணிப்பு. இது விருப்பப் பாடம் என்று சொல்லி மழுப்ப முடியாது. இந்தத் திட்டத்தை அடியோடு கைவிட வேண்டும்.


ஆறு விமான நிலையங்களைத் தனியார் மயமாக்குவதற்கான பணிகளை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இரயில்வே துறையைத் தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது மிகப்பெரிய ஆபத்து ஆகும். சேவைத் துறையை வர்த்தகத்துறை ஆக்குகின்றார்கள். இதனால் பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் உயர்வது மட்டுமல்ல, அனைத்துப் பொருள்களின் விலைவாசி ஏற்றத்துக்கும் காரணமாகிவிடும். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.


ஏற்கனவே பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் இருக்கிறது என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் கூறி இருக்கிறார். நிதி ஆயோக் துணைத் தலைவர் அவர்களும், 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்த நிலை, தேக்க நிலை ஏற்பட்டிருக்கின்றது என்று கூறுகிறார். நூறு நாட்களில் மக்களுக்கு வேதனைதான் மிகுந்திருக்கிறதே தவிர, மோடி அரசு சாதித்தபடியாக எதுவும் இல்லை.


பா.ஜ.க. அரசு தங்களுடைய இந்துத்துவா கொள்கைகளைத் திணிப்பதற்கு முயல்கிறது. இப்படிச் செயல்படுவதால் எல்லா இடங்களிலும் தானாக எதிர்ப்பு உருவாகும். இந்துத்துவா போக்கைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறினார்.