சென்னை: நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே ஆய்வுக்கூட்டம் இரண்டு முறை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழகத்திலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. 


அதன் ஒருபகுதியாக கொடைக்கானலில் வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல ஈரோட்டில் ஜவுளி வாரச் சந்தைகள் மற்றும் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் மாட்டுச் சந்தைக்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.