CV Shanmugam Attacks Annamalai: விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (செப். 16) கோலியனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோலியனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் தலைமை தாங்கினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய கட்சிகள் விரட்டியடிப்பு


கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி., எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஜாகிர் உசேன், தலைமை கழக பேச்சாளர் நடிகை எமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது பேசிய சி.வி.சண்முகம், "காங்கிரஸ், பாஜக எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என அதிமுக, திமுக ஆகிய திராவிட கட்சிகளால் விரட்டியடிக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆகின்றன. 
காங்கிரஸ் கட்சியாவது கேரளாவில் காலூன்றிவிட்டது. ஆனால் தமிழகத்தில் கக்கன், காமராஜரை தவிர யாராலும் காலூன்ற முடியவில்லை. இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என போராட்டங்கள் செய்து எழுச்சி கண்டது தமிழ்நாடு.


ரூ.50 ஆயிரம் கோடி வருவாய்


பேரறிஞர் அண்ணா, கட்சியை குடும்பமாக பார்த்தார். ஆனால் திமுக இன்றைக்கு கோபாலபுரத்தைதான் குடும்பமாக்கியுள்ளது. பெண்களின் வாக்குகளை குறிவைத்து கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். திமுக ஆட்சியில் விலைவாசி அதிகரித்துள்ளது. மதுபானங்களின் விலை உயர்வினால் ரூ.50 ஆயிரம் கோடி வருவாய், அரசுக்கு கிடைக்கிறது. முதலமைச்சருக்கு மட்டுமல்ல அவரது கட்சியை சார்ந்த பாலு, ஜெகத்ரட்சகன் போன்றோர்களுக்கு வருவாய் கிடைக்க செய்துள்ளார்.


வழக்கை சந்திக்க தயார்


அதிமுக ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்த்தவில்லை. திமுக ஆட்சியில் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என்று கூறினார்கள், அதை செய்யவில்லை. மின்சார கட்டணம் என்ற பெயரில் ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடித்து கொண்டிருக்கின்றனர். அதுபோல் ஆவின் நெய் கட்டணமும் உயர்ந்துவிட்டது.


மேலும் படிக்க | 2026-ல் தமிழ்நாட்டில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை சவால்


தமிழ்நாடு முழுவதும் கஞ்சா


இன்றைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு 10 ஆயிரம் ரூபாய் செலவு வைத்துள்ளார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்த ஸ்டாலின், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைக்கவில்லை. ஆனால் பக்கத்திலுள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்து விட்டார். அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் அடைந்துள்ளது. அரிசி இருக்கிறதோ இல்லையோ தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளது. எத்தனை வழக்குகள் என் மீது போட்டாலும் அதை சந்திப்பதற்கு தயாராக உள்ளேன். வழக்குகளை போட்டு உருட்டி மிரட்டி பணிய வைத்துவிடலாம் என்று நினைக்க வேண்டாம்.


திட்டமிட்டே அண்ணாவை இழிவுப்படுத்தும் அண்ணாமலை


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணாவை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். அண்ணாவை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும், தராதரமும் இல்லை. கூட்டணியில் இருந்துகொண்டு தரம் தாழ்ந்து பேசுகிற அண்ணாமலைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். அதிமுக துணை இல்லாமல் பாஜக வெற்றி பெற முடியாது. மோடி மீண்டும் பிரதமராகுவதற்கு அண்ணாமலைக்கு விருப்பம் இல்லைபோல. திட்டமிட்டே அண்ணாவை அண்ணாமலை இழிவுப்படுத்தி பேசியிருக்கிறார். அரசியலை பற்றி உனக்கு என்ன தெரியும்? தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக வெற்றி பெற கூடாதென திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அண்ணாமலை பேசுகிறார். அதனால்தான் திமுகவை விமர்சிப்பதை விட்டுவிட்டு அதிமுகவை விமர்சிக்கிறார், அண்ணாமலை.


திமுகவின் கைக்கூலி அண்ணாமலை


இந்து மதத்தை அழிக்க வேண்டுமென ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்துக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இந்துக்களை அழிக்க வேண்டுமென திமுக செயல்படுகிறது. பேரறிஞர் அண்ணா பேசாத ஒன்றை பேசியதாக கூறும் அண்ணாமலை, திமுகவின் கைக்கூலியாக மாறிக்கொண்டிருக்கிறார். உங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அண்ணாமலை போகின்ற பாதயாத்திரை வசூல் யாத்திரை, நானும் ரவுடி, நானும் ரவுடி என்பதுபோல் நானும் மாநில தலைவர், நானும் மாநில தலைவர் என அண்ணாமலை செயல்படுகிறார்.


கூட்டணியை பிரிக்கும் அண்ணாமலை


அவர் தன் இருப்பை காட்டிக்கொள்ள கூட்டணி தர்மத்தை மீறி பேசிக்கொண்டிருக்கிறார். எங்களை விமர்சனம் செய்வதால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுகவிற்கு 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் முக்கியம். அண்ணாமலை கூட்டணியை பிரிக்க வேண்டுமென்று கங்கனம் கட்டி பேசி கொண்டிருக்கிறார். அண்ணாமலையின் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைமையிடம் வலியுறுத்துவோம்" என்றார்.


மேலும் படிக்க | மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த முற்போக்கு சிந்தனையாளர் தந்தை பெரியார்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ