செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடையாது... அமைச்சர் பதவி என்னவாகும்?
Minister Senthil Balaji: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவரின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Minister Senthil Balaji: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நீதிமன்ற காவலில் இருக்கும் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், அவர் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி தரப்பு
சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
செந்தில் பாலாஜி தரப்பில், ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கையை சுட்டிக்காட்டி, மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், நீதிமன்றமே ஒரு மருத்துவரை நியமித்து செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து ஆய்வு செய்யலாம் எனவும் வாதிடப்பட்டது.
வேலை பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் 10 ஆண்டுகளில் அவருடைய வங்கி கணக்குகளையும், வருமான வரி கணக்கில் இருந்தும், அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணமாவதாகவும், உள் நோக்கத்துடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
அமலாக்கத்துறையின் வாதம்
அமலாக்கத்துறை தரப்பில், செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது.
மேலும், செந்தில் பாலாஜி, ஆரோக்கியமாக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என குறிப்பிடவில்லை எனவும் வாதிடப்பட்டது.
'சாட்சிகளை கலைக்க வாய்ப்பு'
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். அந்த வகையில், அவரின் ஜாமீன் மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி உத்தரவு
அமலாக்கத்துறையின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கொடுக்க முடியாது எனவும், அமைச்சரின் சகோதரர் தலைமறைவாக இருப்பதாலும் ஜாமீன் வழங்க முடியாது என்றும் கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அமைச்சர் பதவி என்னவாகும்?
இந்த நிலையில், திமுக அமைச்சரவையில் இலாக்கா இல்லா அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியின் பதவி என்னவாகும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
மேலும் படிக்க | 3 மாவட்டங்களில் RSS பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது: நீதிமன்றம் கண்டிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ