பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்.
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் - ராஜேஸ்வரித் தம்பதியின் மகளாக 1963, ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர் ஸ்ரீதேவி. தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.
தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்து வந்தார். இவருக்கு 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது கிடைத்தது.
ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ் விங்கிலிஸ், புலி போன்ற தமிழ் படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த மாம் என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்ப்பு பெற்றது.
இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று இரவு துபாய் சென்றார். இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது என பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.