லோக்ஆயுக்தாவில் ரகசிய விசாரணை என்ற விதியை ரத்து செய்து ஒளிவு மறைவின்றி விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக லோக் ஆயுக்தா விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. லோக்ஆயுக்தா அமைப்பை ஒரு காகிதப்புலி போல் ஆக்கி காலில் போட்டு மிதிப்பதா? லோக் ஆயுக்தா அமைப்புக்கு நேர்மையான ஒரு தலைவரை நியமித்து ரகசிய விசாரணை என்ற விதியை ரத்து செய்யவேண்டும் வலியுறுத்தி என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னையும் - ஊழல் சகாக்களையும் காப்பாற்றிக்கொள்ள ‘லோக் அயுக்த’ அமைப்பை ‘காகிதப்புலி’ போலாக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலில் போட்டு மிதிப்பதா?”. 


“நேர்மையான தலைவரை நியமித்து – ‘ரகசிய விசாரணை’ என்ற விதியை ரத்து செய்க”


தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 128 நாட்கள் ஆன பிறகு,”பவர்” இல்லாத லோக் அயுக்தா சட்டத்திற்கு அ.தி.மு.க அரசு இப்போது “பல்” இல்லாத விதிகளை உருவாக்கியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடிப்படை நோக்கத்தையே உருக்குலைத்து கேலிக்கூத்தாக்கியிருக்கிறது. “கமிஷன்” “கரெப்ஷன்” “கலெக்சன்” என்று மெகா ஊழலில் மூழ்கி, கஜானாவைச் சுரண்டி கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசு, பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், 54 மாதங்கள் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்காமல் தூங்கியது. பிறகு உச்சநீதிமன்றம் அரசின் தலையில் ஓங்கிக் “குட்டு” வைத்து, கெடு விதித்த பிறகு வேறு வழியில்லாமல் ஊழலை ஒழிப்பதற்கு எந்த ஒரு வலுவான அதிகாரமும் இல்லாத லோக் அயுக்தா மசோதாவை அவசர அவசரமாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.


அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் பங்கேற்று, லோக் அயுக்தா மசோதா எத்தகையை உயிரற்ற வெறும் “எலும்புக்கூடாக” இருக்கிறது என்பதை எல்லாம் விளக்கிப் பேசி மசோதாவை பேரவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்புமாறு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்தினேன். ஆனால் அதை ஏற்க மனமின்றி அந்த மசோதாவை தடுமாற்றத்தோடு நிறைவேற்ற முயன்ற போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளிநடப்புச் செய்து “பொம்மை” லோக் அயுக்தாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க அமைச்சர்கள் மீதோ, முதலமைச்சர் மீதோ எந்தவொரு ஊழல் விசாரணையும் நடத்தி விடாத அளவில் ஒரு லோக் அயுக்தா அமைப்பை உருவாக்கியது சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆர்வலர்களுக்கு பேரதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.


அப்படிப்பட்ட லோக் அயுக்தாவிற்கும் கூட உரிய காலத்தில் விதிகளை உருவாக்காமல், தலைவரையும் நியமிக்காமல் அ.தி.மு.க அரசு தாமதம் செய்தது. மீண்டும் உச்சநீதிமன்றம் எச்சரித்தப் பிறகு இப்போது லோக் அயுக்தா விதிகளை உருவாக்கியிருக்கிறது. ஊழல் புகார்கள் மீது ரகசிய விசாரணை நடத்த வேண்டும்; புகாருக்குள்ளான ஊழல்வாதி குறித்து பத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரிவிக்கக் கூடாது; விசாரணை நடக்கும் போதோ அல்லது விசாரணை முடிந்த பிறகோ கூட அந்த விவரங்களை தெரிவிக்கக் கூடாது என்றெல்லாம் வகுத்துள்ள விதிகள் அ.தி.மு.கவில் உள்ள ஊழல் அமைச்சர்களையும், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள முதலமைச்சர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவும் வகுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.


லோக் அயுக்தாவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் “தேடுதல் குழு” (Search Committee) உறுப்பினர்களை எந்த நேரத்திலும் மாற்றலாம் என்று கொண்டு வரப்பட்டுள்ள விதி, அரசுக்கு விரும்பாத யாரையும் “தேடுதல் குழு” லோக் அயுக்தா அமைப்பிற்கு தலைவராகவோ, உறுப்பினராகவோ பரிந்துரை செய்து விடக்கூடாது என்ற இழிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரிகிறது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கும், ஊழல் ஒழிப்பு பணியிலும் ஈடுபட வேண்டிய லோக் அயுக்தா அமைப்பு ஊழல் விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என்று கூறியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடித்தளத்தையே தகர்த்து எறியும் அ.தி.மு.க அரசின் கேடு கெட்ட நடவடிக்கை மட்டுமல்ல - ஊழலே எங்கள் வாழ்க்கையாக இருக்கும் போது நாங்கள் எப்படி அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பது போல் அமைந்துள்ளது.


ஆகவே, லோக் அயுக்தா அமைப்பிற்கு நேர்மையான ஒரு தலைவரை நியமிக்கவும், ஊழல்வாதிகள் மீது நடைபெறும் விசாரணைகள் ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக பொதுமக்களுக்குத் தெரியும்படி நடக்கவும் “ரகசிய விசாரணை” என்ற விதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், லோக் அயுக்தா அமைப்பை ஒரு “காகிதப்புலி” போல் ஆக்கி காலில் போட்டு மிதிக்க நினைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.