நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு தர முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
நாடு மழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு தனியாக விலக்களிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
புது டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க முடியுமா? என திமுக எம்.பி டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் எழுத்துப் பூர்வமாக பதில் ஒன்றை அளித்தார். அதில் நாடு மழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு தனியாக விலக்களிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அளித்த பதிலில், நீட் தேர்வு விலக்கு என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும் ஒரு தேர்வாகும். அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது. அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்டத்தின் படி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு பொருந்தும். நாடு முழுவதும் ஒரே முறையில் நீட் தேர்வு நடத்தப்படுவதால் விலக்கு என்றே பேச்சுக்கே இடமில்லை என தெளிவாக தனது பதிலில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் குறிப்பிட்டுள்ளார்.
அரியலூர் மாணவி அனிதாவில் தொடங்கி இப்போது ரிதுஸ்ரீ, வைஷியா வரை பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் தற்கொலைக்கு நீட் தேர்வு தான் காரணமாக இருந்திருக்கிறது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருவதால், தமிழக மாணவ - மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நீட் தேர்வால் தங்கள் மருத்துவ கனவு சிதைந்து போவதாகக் கூறி, அரியலூர் மாணவி அனிதாவில் தொடங்கி ரிதுஸ்ரீ, வைஷியா வரை பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தற்கொலைக்கு செய்துக்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புகழ்பெற்ற நிறுவனங்களில் சேர்ந்து லட்சக்கணக்கில் செலவழித்து தனிப்பயிற்சி பெற்றால் தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியிருப்பதன் மூலம், ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு சிதைக்கப்பட்டிருக்கிறது என தொடர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.