இறைச்சிக்காக பசு, காளை, கன்று, ஒட்டகம் விற்கக் கூடாது என்று மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. மாட்டு இறைச்சி விற்பனையை தொடர தனிச்சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரளா மற்றும் புதுச்சேரி அரசு கூறி உள்ளது.


மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கோவை, மதுரை, நெல்லை மற்றும் தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளன. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இந்த போராட்டத்தின் போது சிலர் மாட்டிறைச்சியை சாப்பிட்டு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும் பொதுமக்களுக்கு மாட்டுக்கறியை வழங்கினர். பா.ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட சிலர் முயன்றனர்.


இந்நிலையில் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் திமுக சார்பில் நாளை (புதன்கிழமை) மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.