காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து காவிரி நடுவர்மன்றத்தைக் கலைத்து மத்திய அரசு அரசாணை வெளியீடு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. சுமார் 28 ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்றம் இயங்கி வரும் நிலையில் மத்திய அரசு காவிரி நடுவர்மன்றத்தைக் கலைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. 


முன்னதாக மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பிரச்னை, நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு காவிரி விவகாரம் தொடர்பாக இறுதி தீர்ப்பை வழங்கியது நடுவர் நீதிமன்றம். காவிரி நடுவர் இறுதி தீர்ப்பை செயல்படுத்தும் படி உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது.  


உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால், காவிரி நடுவர் மன்றம் கலைக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் அரசாணையை  வெளியிட்டுள்ளது. அதில் காவிரி நடுவர் நீதிமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.