காவிரி நீர் தமிழக எல்லைக்கு இன்று வந்து சேரும்!!
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்ததால் தமிழக அரசு சம்பா சாகுபடிக்காக காவிரியில் 50 டி.எம்.சி. கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. பஸ்கள் இயக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு கர்நாடகத்தில் விவசாயி களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் கர்நாடகாவில் நேற்று முன்தினம் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கில் கர்நாடகத்தின் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்ற தவறினால் சட்ட சிக்கல்கள் ஏற்படும் என்பதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதமும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டது. மொத்தம் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டு இருக்கிறது.
இந்த தண்ணீர் இன்று தமிழகத்தின் எல்லைக்குள் வந்து சேரும், பிறகு இன்று இரவு மேட்டூர் அணையைக்கு தண்ணீர் வரும் என தெரிகிறது.