கஜா மீட்பு பணி; அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் - திமுக!
கஜா புயல் கோரதாண்டவம் ஆடி 2 வாரம் கழித்தும் இயல்புநிலை திரும்பவில்லை, மத்திய - மாநில அரசுகள் விரைந்து செயலாற்ற வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
கஜா புயல் கோரதாண்டவம் ஆடி 2 வாரம் கழித்தும் இயல்புநிலை திரும்பவில்லை, மத்திய - மாநில அரசுகள் விரைந்து செயலாற்ற வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "இயற்கைப் பேரிடராம் கஜா புயல் கோரதாண்டவம் ஆடிமுடித்த பகுதிகளில் இரண்டு வாரம் கழித்தும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. கிராமங்கள் பலவற்றுக்கு மின்வசதி கிடைக்காததால் இருளிலேயே மூழ்கியுள்ளன. குடிசைகளை இழந்தவர்கள் பரிதவிக்கிறார்கள். தென்னை, வாழை, நெற்பயிர் எல்லாம் சாய்ந்து விவசாயிகளின் வாழ்வைச் சாய்த்துப் பறித்திருக்கிறது. நாட்டுக்கே சோறு போட்ட டெல்டா மாவட்டத்தின் மக்கள் நடுவீதியில் நின்று, தங்கள் உணவுக்காக உதவியை எதிர்பார்த்திருக்கும் அவலத்தைப் பார்க்கும் மனதிடம் இதயமுள்ள எவருக்கும் இல்லை. ஏறத்தாழ 30 ஆண்டுகால வாழ்வையும் சேமிப்பையும் சூறையாடிவிட்டது கஜா புயல். முழுமையாக மீண்டு வருவதற்கு ஆண்டுக்கணக்கில் ஆகும் என்றாலும், பேரிடரை எதிர்கொள்ளும் அந்த மக்களின் மனவலிமை பிரமிக்க வைக்கிறது.
தங்களுக்கு உதவிப்பொருட்கள் அனுப்பி வைப்போரின் வாகனங்களில் பதிலுக்கு இளநீர்-தேங்காய்களை நிரப்பி நன்றி காட்டுகிறார்கள். மின்சார இணைப்பு தரும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தங்களால் இயன்றதை சமைத்து வழங்குகிறார்கள். எங்கள் கிராமத்துக்கு சோறு வந்துவிட்டது, அடுத்த கிராமத்துக்கு இன்னும் எந்த உதவியும் போகவில்லை, அங்கே அனுப்புங்கள் என்கிறார்கள். இதுதான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் தமிழ்நாட்டின் பண்பாடு. அந்தப் பண்பாட்டையும் வாழ்வையும் நிலைநாட்ட பிற பகுதிகளில் உள்ளவர்கள் பேருதவிகளைப் புரிந்து வருகிறார்கள். அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், தன்னார்வலர்கள் எனப் பல தரப்பினரும் உதவி வரும் நிலையில், தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான உங்களின் கைகளும் தொடர்ந்து உதவி, எப்போதும் உதவும் கரங்களாகவும் காக்கும் கரங்களாகவும் திகழ்வது கண்டு, உங்களில் ஒருவனான நான் நிம்மதியும் பெருமிதமும் கொள்கிறேன்.
தி.மு.கழகத்தின் சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டது. கழக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1 மாத ஊதியமும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலிருந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வாகனங்களை உங்களில் ஒருவனான நான் கொடி அசைத்து அனுப்பினேன். கழக அணிகளின் சார்பிலும், மாவட்டக் கழகங்களின் சார்பிலும், ஒன்றிய - நகர கழகங்கள் இணைந்தும் பல உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது, ‘உற்றுழி உதவுதல் உறுபொருள் கொடுத்தல்’ எனும் சொற்றொடருக்கு உரிய விளக்கமாக அமைந்திருக்கிறது.
எங்கெங்கே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தினமும் தேடித் தேடிப் பார்த்து அங்கெல்லாம் சென்று உதவி செய்து வருகிறார்கள் கழக உடன்பிறப்புகள். நாகை மாவட்டத்தைப் புயல் தாக்கிய கொடூர செய்தி வெளியான சிறிது நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம் இதுவரை காணாத பாதிப்பை அடைந்திருக்கிறது என்பதை அறிந்ததும், கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும் கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கும் உடனடியாகச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரும் ஆளுங்கட்சியினரும் புயல் சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகாதபடி, மின்இணைப்பு - தொலைத் தொடர்பு இணைப்புகளை வழங்காமலும், சில இடங்களில் அவற்றைத் துண்டித்தும் மக்களை வாட்டி வதைத்த நிலையில், கழகத்தினர் மேற்கொண்ட பணி சிறப்பானது.
அதுபோலவே, கஜா புயலின் தாக்கம் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், குறிப்பாகக் கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் அதிகளவில் ஏற்பட்டிருப்பதை இதுவரை அரசாங்கம் சரிவரக் கவனிக்கவுமில்லை;தேவையான உதவிகளையும் செய்யவில்லை. ஆனால், புயல் கரை கடந்த சில நிமிடங்களிலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 சட்டமன்ற உறுப்பினர்களும் உடனடியாகக் களமிறங்கி, மீட்புப் பணிகளிலும் நிவாரண உதவிகள் வழங்குவதிலும் ஈடுபட்டனர். இன்றைய நாள் வரை, மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய - அடிப்படைத் தேவைகளை உணர்ந்து உதவி செய்து வருகின்றனர்.
கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 11 வாகனங்களில் நிவாரணப் பொருட்கள், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனைக் கொடியசைத்து அனுப்பும்போது, அவற்றில் இரண்டு வாகனங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க ஆவன செய்துள்ளேன். அந்தப் பகுதிக்கு மேலும் என்னென்ன தேவை என்பதை அறிந்து உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்க்கட்சியான கழகமும் தோழமைக் கட்சிகளும் பொதுநல அமைப்பினரும் தன்னார்வலர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆளுந்தரப்பின் பணி எப்படி நடைபெறுகிறது என்பதற்கு அமைச்சர்கள் செல்லும் இடங்களில் மக்களிடம் இயற்கையாக வெளிப்படும் வேதனைக் குரலும் எதிர்ப்பு முழக்கமுமே சாட்சியங்களாக இருக்கின்றன.
ஹெலிகாப்டரில் உலா வந்ததை, துல்லியமான கவனிப்பு எனத் தன்னைத்தானே பாராட்டிக்கொண்டார் முதலமைச்சர். ஆனால், மக்களின் கொந்தளிப்பை எதிர்கொள்ள முடியாமல் ரயில் பயணம் மேற்கொண்டு, அதன்பின் தரை மார்க்கமாகக் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் காவல்துறை அரண் அமைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு திரும்பி வந்திருக்கிறார். அப்போதும்கூட, ஆங்காங்கே எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன.
எந்தவித ஆய்வையும் முழுமையாக மேற்கொள்ளாமல், அவசரக் கோலத்தில் அரைகுறை விபரங்களோடு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து நிவாரண நிதி கேட்டதுகூட, பாதிக்கப்பட்ட மக்களின் மேல் உள்ள அக்கறையினால் அல்ல என்பதும், அது தனியார் நிறுவனம் ஒன்று தகுதி பார்க்காமல் வழங்கிய விருதினைப் பெறுவதற்காகத்தான் என்பதும் வெட்டவெளிச்சமாகி முதலமைச்சரின் முகத்திரையைக் கிழித்துப் போட்டிருக்கிறது. இதன்பிறகு முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மேற்கொள்ளும் சம்பிரதாயப் பயணங்களை புயல் பாதித்த பகுதி மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை.
அவர்கள் எதிர்ப்பார்ப்பது, பெயரளவுக்கான அறிவிப்புகளை அல்ல;வாழ்வாதாரத்தை எதிர்கொள்வதற்கான தொடர்ச்சியான-முழுமையான நிவாரண உதவிகளைத்தான்! இழந்த குடிசைகளுக்கு இழப்பீடு தரப்படுவதுடன், கான்க்ரீட் வீடு திட்டம் வெற்று அறிவிப்பாக முடிந்துவிடக்கூடாது என்ற உறுதிமொழியையும்தான். தென்னை மரத்துக்கு இழப்பீடாக ரூ.1100 என்பது விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்காது. ஒரு மரத்துக்கு 50ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்குவதுடன், புதிய தென்னங்கன்றுகளையும் அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதற்குத் தேவையான உரம் உள்ளிட்டவற்றையும் வழங்கிட வேண்டும். விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஆனால், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட கடன் தள்ளுபடி அறிவிப்பே சரிவர நிறைவேறாத நிலையில் விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள்.
சுயமரியாதையுடனான வாழ்வைக் கொண்டிருந்தவர்கள், இயற்கைப் பேரிடரால் துன்பங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், அவர்களுக்கு உதவ வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசாங்கத்திற்குத்தான் இருக்கிறது. விவசாயிகள் எவ்வித இழப்பீடும் பெறாத நிலையில் உள்ளனர். சாய்ந்த தென்னை மரங்களை அகற்றுவதற்கு வெறும் 600 ரூபாய் என்பது கடல் அலைகளைக் கைகளால் தடுத்துவிட நினைக்கும் பயனற்ற செயல். அறுக்கப்படும் தென்னை மரங்களை அகற்றி எங்கே கொண்டு செல்வது என்பதில் தொடங்கி ஏராளமான பிரச்சினைகளை விவசாயிகள் எதிர்கொள்கிறார்கள். புது தென்னங்கன்றுகள் வழங்குவதிலும் வணிக நோக்கதில் சில செயல்பாடுகள் நடைபெறுவதால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள்.
மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தாலும் மற்ற கட்டணங்கள், வரிகள் ஆகியவற்றை செலுத்த காலநீட்டிப்பு வேண்டும், கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் டெல்டா மக்கள். நியாயவிலைக் கடைகளில் டிசம்பர் மாதத்திற்கான மண்ணெண்ணெய்யை நவம்பரிலேயே வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது. ஆனால், இருமாத காலத்திற்கான மண்ணெண்ணெய்யை விலை கொடுத்து வாங்கும் சக்தி, புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களிடம் இல்லை. நியாய விலைக் கடைகள் மூலமாக அவர்களுக்கு இயன்றவரை இலவசமாகப் பொருட்கள் கிடைக்க வழி கண்டிட வேண்டும். இத்தகைய உதவிகளுக்கும் நிதி ஆதாரங்களுக்கும் மத்திய அரசை எதிர்பார்த்திருக்கிறது மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு.
ஆட்சியாளர்களின் ஊதாரித்தனமான செலவினங்கள், முதலீடுகளை ஈர்க்கும் திறனற்ற நிலை, வெளிமாநிலங்களை நோக்கிச் செல்லும் தொழிற்சாலைகள் என வருவாய் பாதிப்பு அதிகமாகி, பெருங்கடனில் தவிக்கிறது தமிழ்நாடு. நிர்வாக சீர்கேட்டால் ஏற்பட்ட இந்த செயற்கைப் பேரிடரைத் தொடர்ந்து இயற்கைப் பேரிடரும் தாக்கியுள்ள நிலையில், மத்திய அரசு வழங்கும் நிதிதான் தமிழ்நாட்டைக் காப்பாற்றும்.
மத்திய அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வுக் குழுவினர், கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர். அவர்களின் காலில் விழுந்து பெண்கள் கதறிய காட்சிகளும் செய்திகளும் மனதை உலுக்குகின்றன. எத்தகைய இழப்புகள் ஏற்பட்டிருந்தால், இப்படி உதவி கேட்டு அழுதிருப்பார்கள்!
இரண்டு வாரங்கள் கடந்தும் இயல்பு நிலை திரும்பாமல் இருட்டிலும் சேற்றிலும் சகதியிலும் வானமே கூரையாக-கட்டாந்தரையே பாயாக வாழவேண்டிய அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகம் சுற்றும் பிரதமருக்கு இந்தியாவின் ஒரு பகுதியான தமிழ்நாட்டின் பாதிப்புகளை விமானத்தில் பறந்து பார்க்கக்கூட நேரமில்லை, விருப்பமில்லை. மாநில ஆட்சியாளர்களின் அலட்சியமான செயல்பாடுகள் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவில்லை.
தஞ்சை-புதுக்கோட்டை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்துவதை எதிர்த்து விவசாயிகளும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து போராடியபோது அவற்றை ஒடுக்க துணை ராணுவத்தை அனுப்பும் அளவுக்கு வேகம் காட்டிய மத்திய அரசும் அதற்குத் துணை நின்ற மாநிலஅரசும், தற்போது இயற்கைப் பேரிடரால் அந்தப் பகுதியே ஒட்டுமொத்தமாகத் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் எந்தவித மீட்புக் குழுவும் வரவில்லையே நாங்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? எங்களை அழித்து - ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய - மாநில அரசுகளின் மறைமுக செயல்பாட்டுக்கு கஜா பதிப்புகளைப் பயன்படுத்துகின்றனவா என்பதுதான் மக்களின் சந்தேகமும் அச்சமாகவும் இருக்கிறது. அதனால்தான் ஆய்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரிகளிடம் தங்களின் கோரிக்கையை முன்வைத்து கதறியிருக்கிறார்கள் மக்கள்.
அலட்சியம் காட்டும் அரசுகளின் செயல்பாடுகளால் உயிரிழப்புகளும் தற்கொலைகளும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகில் நீர்மூளை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பாதுகாப்பு தேடி அரசு முகாமில் தங்கியிருந்தும் போதிய உணவும் வசதிகளும் இல்லாததால், நிவாரண உதவிக்காக சாலையோரமாக வந்து காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோதி அமுதா, சரோஜா, சுமதி, ராஜகுமாரி என 4 பெண்கள் பரிதாபமாகப் பலியானார்கள்.
தஞ்சை மாவட்டம் சோழகன்குடிகாட்டைச் சேர்ந்த விவசாயி சௌந்தரராசன் தனது 5 ஏக்கர் நிலத்தில் இருந்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில், அரசின் சார்பில் 1100 ரூபாய் மட்டுமே இழப்பீடு என்பதைக் கேட்டதும் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஒரத்தநாடு கீழையூரைச் சேர்ந்த விவசாயி சிவாஜி தனது நிலத்தில் நெல்லும் தென்னையும் சாய்ந்ததால் அதிர்ச்சிக்குள்ளாகி மாரடைப்பு ஏற்பட்டு மாண்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள முள்ளங்குறிச்சி கிராம விவசாயி முனியாண்டி தனது தோட்டத்தில் சாய்ந்து கிடந்த தென்னைமரங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உயிரிழந்தார். நெடுவாசல் கிராமத்தில் திருச்செல்வம் என்ற விவசாயி தனது 20 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த பயிர்களும் மரங்களும் சாய்ந்ததைக் கண்டு மனம் தளர்ந்த விஷம் குடித்து உயிரிழந்துவிட்டார்.
பட்டுக்கோட்டை வாட்டாக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மோட்டார் சைக்கிளில் சென்றபோது தாழ்வாக கிடந்த மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு அவர் உடலில் பாய்ந்து பலியாகியுள்ளார். மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறாத காரணத்தாலும், அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கினாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
மரணப் படுக்கையில் தவிக்கின்றன புயல் பாதித்த பகுதிகள். மறுவாழ்வு தரும் வகையில் அரசாங்கத்தின் நிவாரண சிகிச்சை அவசியம்.
சேதங்களை முழுமையாக மதிப்பிடாமல் உரிய ஆலோசனைகள் நடத்தாமல் பிரதமரிடம் முதல்வர் கேட்ட 15ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி என்பது குறைவான தொகைதான். முழுமையான மதிப்பீடு எதுவும் செய்யாமல் அவசரக் கோலத்தில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுதான். ஆனால், அந்தத் தொகையாவது உடனடியாகக் கிடைக்கவும், கஜா புயலின் முழுமையான பாதிப்புகளை மதிப்பிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் மத்திய ஆய்வுக் குழுவினர் தரும் அறிக்கைதான் கடைசி நம்பிக்கையாக உள்ளது.
காலில் விழுந்து கதறிய மக்கள் வடித்த கண்ணீரின் வலியையும் வலிமையையும் உணர்ந்து ஆய்வுக் குழுவினர் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்து, விரைவாக நிவாரணம் கிடைத்திட உதவிட வேண்டும். மத்திய-மாநில அரசுகளிடமிருந்து நியாயமான நிவாரணம் கிடைத்திடவும் வாழ்வுரிமையை மீட்டிடவும் கழகத்தின் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும்.கழக உடன்பிறப்புகளின் கரங்கள், துன்பத்தில் உழல்வோர்க்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்யும்!" என குறிப்பிட்டுள்ளார்!