புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தை மத்திய - மாநில அரசுகள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டதாவது:


உலகம் முழுவதும் புகையிலைப் பொருட்களின் விற்பனையால் இளைஞர்களும், அப்பாவி பொதுமக்களும் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை குறுகிய காலத்திலேயே இழக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் புகையிலை சார்ந்த நோய்களினால் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.


தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 28 லட்சம் பேர் புகையிலையை ஏதாவது ஒரு வடிவத்தில் பயன்படுத்துகிறார்கள். புகையிலையை இருவர் பயன்படுத்தினால் அதில் ஒருவர் இறப்பதற்கு காரணம் அந்த புகையிலைதான்.


இந்தியாவில் புகையிலை சார்ந்த நோய்களின் பாதிப்பால் நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்து 500 பேரும், ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேரும் மரணம் அடைகின்றனர். புகையிலையின் பாதிப்பால் நம் நாட்டில் மட்டும் 30 நிமிடத்திற்கு ஒருவர் இறந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் வேதனைக்குரியது.


புகையிலையைப் பயன்படுத்துவதால் மருத்துவச் செலவு மிக மிக அதிகமாகிறது, உயிரிழப்பு ஏற்படுகிறது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது, காடுகள் அழிக்கப்படுகின்றன, மண்வளம் கெட்டுப்போகிறது, இளைஞர்களின் ஆற்றல் இழப்பு, இளம் வயதிலேயே பெண்கள் விதவையாகிறார்கள், குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு, வறுமை ஏற்படுகிறது, பொருளாதாரப் பின்னடைவு உண்டாகிறது.


இவற்றையெல்லாம் உணர்ந்ததன் அடிப்படையில் தான் உலக சுகாதார நிறுவனம் ஆண்டு தோறும் மே மாதம் 31-ம் தேதியை உலக புகையிலையில்லா தினமாக அனுசரித்து வருகிறது.


எனவே இந்திய அரசு புகையிலைப் பயன்பாட்டை குறைக்கவும், அதன் தீங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகையிலை நிறுவனங்களின் குறுக்கீடுகளை தடுக்கவும் அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.


மத்திய அரசு தேசிய புகையிலை தடுப்புத் திட்டம் (NTCP) மூலம் புகையிலை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றால் புகையிலையை கட்டுப்படுத்துவதில் இன்னும் ஏன் முழுமையடையவில்லை என்ற கேள்வி எழுகிறது.


எனவே புகையிலையைக் கட்டுப்படுத்தவும், புகையிலையைப் பயன்படுத்துவதில் இருந்து மக்களை மீட்கவும் அரசு - புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தை முறையாக, சரியாக, முழுமையாக செயல்படுத்த வேண்டும்.


குறிப்பாக புகையிலையை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக பள்ளிப் பாடம் முதல் கல்லூரிப் பாடம் வரை பாடத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஏன் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


மேலும் மத்திய அரசு நாடு முழுவதும் நகரம் முதல் கிராமம் வரை வீதி, வீதியாக துண்டு பிரச்சாரம் செய்தும், வாகனம் மூலம் ஒலி ஒளியினால் விளம்பரம் செய்தும், மற்றும் பேருந்து, ரயில், விமானம் போன்ற போக்குவரத்து வாகனங்களிலும், அனைத்து மருத்துவமனைகளிலும், பொது இடங்களிலும், திரையரங்குகளிலும், தொலைக்காட்சியிலும், தனியார் நிறுவனங்களிலும் விளம்பரங்கள் செய்தும் புகையிலையைப் பயன்படுத்துவதால் வரும் பல்வேறு நோய்கள் குறித்தும், இறப்புகள் குறித்தும் தெள்ளத்தெளிவாக பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.


அது மட்டுமல்ல மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலையை உற்பத்தி செய்யவோ, புகையிலை சம்பந்தமான பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ மத்திய, மாநில அரசுகள் ஒரு போதும் நாட்டில் உள்ள எவருக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.


முக்கியமாக நாட்டில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக தன்னார்வலர்கள், இளைஞர்கள் போன்றோர் ஒருங்கிணைந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து புகையிலையை அறவே ஒழித்திட செயலாற்ற வேண்டும்.


மேலும் மத்திய, மாநில அரசுகள் புகையிலையினால் ஏற்படுகின்ற பேராபத்தை உணர்ந்து, புகையிலையின் கொடிய நஞ்சிலிருந்து பொது மக்களைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முன்வர வேண்டும் என ஜி.கே வாசன் கூறியுள்ளார்.