சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில்  ரவிக்குமார், அபிஷேக், சுகுமாரன்,  ஏரோல் பிராஸ், முருகேசன், பரமசிவம், சுரேஷ், ராஜசேகர், தீன தயாளன், குணசேகரன், பாபு, பழனி, ராஜா, சூர்யா, ஜெயகணேஷ், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2018 ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை  தொடர்ந்து 6 மாதங்கள் இவர்கள் ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை வன்கொடுமை செய்தது  தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இது தொடர்பாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 11 பேரையும் கைது செய்தது போலீசார். சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்ஸோ, கொலை முயற்சி, கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.


இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கைதானவர்களில் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாபு என்பவர் மரணமடைந்தார். மேலும், 16 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி மரணமடைந்த ஒருவரை தவிர மீதமுள்ள 16 பேர் மீது விசாரணை நடைபெற்றது. இதை தொடர்ந்து,16 பேரில் குணசேகரன் தவிர மற்ற 15 பேர் குற்றவாளிகள் என்று  தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை அறிவித்துள்ளது. 


சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 15 பேரின் தண்டனை விவரம்: 


> ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
> 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
> ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
> மீதமுள்ள 9 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.