ஸ்கூல்ல இருந்து ஒண்ணாதான் இருப்பாங்க.. குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் கண்ணீர் கதை!
Chennai News: சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஷ்வரர் கோவில் குளத்தில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சென்னை: நங்கநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று குளத்தில் தீர்த்த வாரி செய்வதற்காக 25-க்கும் மேற்பட்டவர்கள் குளத்தில் இறங்கியுள்ளனர். சாமி ஊர்வலம் வருவதற்கு முன்பு குளத்தில் மூன்று முறை மூழ்கி எழ வேண்டும் என்பதுதான் தீர்த்த வாரி. அப்படி 25 பேர் குளத்தில் இறங்கி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நடுவில் இருந்த ஆழமான பகுதிக்குச் சென்ற இரண்டு பேர் மாட்டிக்கொள்ள, அவர்களைக் காப்பாற்ற அங்கிருந்த ஐந்து இளைஞர்கள் கைகோர்த்து ஒன்றாக இழுத்துள்ளனர். அப்பொழுது அந்த ஐந்து பேரும் ஆழத்தில் சிக்கி மூழ்கியுள்ளனர். கிட்டதட்ட ஒரு நிமிடத்திற்கும் மேல் அவர்கள் தத்தளித்துக் கொண்டே காப்பாற்றுமாறு கூறியுள்ளனர். ஆனால் அங்கிருந்தவர்கள் அப்படியே நின்றிருந்த நிலையில், குளத்தின் எதிரே கடை வைத்திருந்த இருவர் ஓடிச்சென்று காப்பாற்ற முயன்றுள்ளனர். அதில் 2 பேரை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்துள்ளது. அதற்குள் அந்த 5 பேரும் மூழ்கியுள்ளனர்.
அதன்பிறகு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 1 மணி நேரத்துக்கும் மேல் மூழ்கி இருந்ததால், உயிரற்ற உடல்களாகவே அந்த ஐந்து பேரும் மீட்கப்பட்டனர். குளத்தில் தெப்பத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தீர்த்தவாரிக்கு அனுமதி கேட்கவில்லை என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் உயிரிழந்த ஐந்து பேரில் மூன்று பேர் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்து தற்போது சிஏ (CA) படிப்பதற்காக ஒன்றாக ஒரே கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வந்துள்ளனர். பள்ளியில் தொடங்கிய இவர்களது நட்பு ஒருவர் உயிரை மற்றொருவர் காப்பாற்றும் நோக்கத்தில் முடிந்துள்ளது. சம்பவம் நடந்த குளத்திற்கு கள ஆய்விற்காக சென்ற போது அங்கு ஆழமான பகுதி இருந்தும் அந்த எச்சரிக்கையை கோவில் நிர்வாகம் தெரிவிக்காதது தான், இந்த விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து குளத்திற்கு எதிரே கடை வைத்திருக்கும் நபர்கள் கூறும் போது, ஏழு பேர் முதலில் சிக்கியதாகவும், அதில் இரண்டு பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்ததாகவும் அதற்குள் மற்ற ஐந்து பேரும் மூழ்கி போனதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | 5 இளம் அர்ச்சகர்கள் பலி! குவிந்த போலீஸ்... முதலமைச்சர் இரங்கல் - என்ன நடந்தது?
ஐந்து இளைஞர்களின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு 2 லட்சம் ரூபாய் நிதியும் அறிவித்திருந்தார். அந்த நிதியை வழங்குவதற்காக அமைச்சர் தா. மோ.அன்பரசன் உயிரிழந்த இளைஞர்களின் வீடுகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு இரண்டு லட்சம் ரூபாய் நிதியை வழங்கிச் சென்றார்.
உயிரிழந்த ஐந்து பேரில் ஒருவரான வனேஷ் என்பவரின் பெரியம்மா கூறும்போது, சிறு வயதிலிருந்தே கஷ்டப்பட்டு இப்பொழுதுதான் சிஏ படித்து வருவதாகவும், இனி குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வீட்டிற்கு நம்பிக்கை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். ஏழ்மையான சூழ்நிலையில் வளர்ந்த வனேஷ் தற்போது தான் குடும்பத்திற்கு நம்பிக்கை அளிக்க தொடங்கிய நிலையில் அதற்குள் அவரது மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலைய செய்துள்ளதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இளைஞர்களின் இந்த மரணம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதற்கு யார் காரணம்? கோவில் நிர்வாகம் செய்த தவறு என்ன? என்பதை விசாரிக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இளைஞர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | கொரோனா தொற்றுக்கு கோவை பெண் உயிரிழப்பு...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ