நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள், குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டுகாலப் போராட்டத்துக்கு கிடைத்துள்ள விடியலாக இது பார்க்கப்படுகிறது. 


அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மூலம் திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 843 ஊராட்சிகளில் உள்ள 74 குளங்கள் மற்றும் 971 குட்டைகளில் நீர் நிரப்பப்பட்டு சுமார் 50 லட்சம் மக்கள் வரை பயனடைவார்கள் என்று தெரவித்துள்ளனர். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஏராளமான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அதன் விளைவாக கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, திட்டமானது 1862 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். 


இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து நீரை மின்மோட்டார் மூலம் எடுத்து, குழாய்களின் வழியே மூன்று மாவட்டங்களிலுள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நிரப்பும் வகையில் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.


தொடர்ந்து திட்டத்தை ரூ.1,532 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இரண்டு நிறுவனங்கள் கோரியிருந்த நிலையில், முதல் கட்டமாக திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. திட்டத்தின் சுய பயன்பாட்டுக்காக 132 கோடி ரூபாய் மதிப்பில் சூரிய ஒளி மின்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.



அதன் தொடர்ச்சியாக திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா அவிநாசியில் இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.