முதல்வர் நாராயணசாமி தர்ணா: முக ஸ்டாலின் வாழ்த்து
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான தர்ணா போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் டெலிபோனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான தர்ணா போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் டெலிபோனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் நாராயணசாமி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் தலைகவச உத்தரவை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதனிடையே மாநில அரசு செயல்படுத்த முடிவு செய்த 30 நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க கிரண்பேடி மறுத்துள்ளதாக குற்றம் சாட்டிய நாராயணசாமி, நேற்று அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்த அவர், பிற்பகலில் ஆளுநர் மாளிகை முன்பு கருப்பு உடை அணிந்து போராட்டத்தை தொடங்கினார்.
நாராயணசாமியுடன் அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கருப்பு துண்டு அணிந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் மாளிகை வாயிலில் போராட்டம் நடைபெறுவதால் கிரண்பேடி நேற்று தமது நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.
புதுச்சேரி மக்களுக்கு நலம் தரும் 30 திட்டங்களுக்கு கிரண் பேடி ஒப்புதல் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று நாராயணசாமி தெரிவித்தார். நேற்று இரவு அங்கேயே படுத்து தூங்கிய அவர், இரண்டாவது நாளாக இன்று தர்ணாப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் புதுவை ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் நாராயணசாமியுடன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த போராட்டம் வெற்றி பெறுவதற்காக வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் நாராயணசாமியிடம் கூறினார்.