கூறியபடி எடப்பாடி பழனிசாமி மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டு வந்தால் முதல்வருக்கு திமுக பாராட்டு விழா நடத்த தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க 14 நாள் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். அப்போது, நியூயார்க் நகரில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரூ.2,780 கோடியில் தொழில் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், தமிழகத்துக்கு வருவதாகக் கூறப்படும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் வந்தால் தி.மு.க. சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தத் தயாராக இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல மண விழாவை தலைமையேற்று நடத்தி வைத்த பின்பு உரையாற்றிய அவர் கூறுகையில்; தவறான பொருளாதார கொள்கைகளால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு வருவதாக தெரிவித்தார். 


அனைத்துக் கட்சி தலைவர்கள் எல்லாம் மேடையில் இருப்பதால் நாகரீகம் கருதி அரசியல் பேச விரும்பவில்லை என்றார். பின்னர் அரசியல் பேசாமல் சென்றால் வெள்ளக்கோவில் சாமிநாதன் தன்னை கோபித்துக்கொள்வார் எனக் கூறிய அவர், தமிழக அரசை பற்றி ஒரு பிடிபிடித்தார். அமெரிக்காவிற்கு சென்று அங்கு அப்பட்டமான பொய் ஒன்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். ஏற்கனவே 2 முறை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் சுமார் 5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறும் தமிழக அரசு, எங்கே யாருக்கு வேலை அளித்துள்ளது எனக் கூற முடியுமா என கேள்வி எழுப்பினார். 


மேலும், தமிழகத்தில் 220 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் அப்பட்ட பொய் ஒன்றை முதல்வர் கூறியிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், உண்மையிலேயே தமிழகத்துக்கு முதலீடுகளை முதலமைச்சர் பெற்றிருந்தார் என்று சொன்னால், திமுக சார்பில் நாங்களே அவருக்கு பாராட்டு விழா நடத்த தயங்கமாட்டோம் என திமுக தலைவர் கூறினார்.