ராகிங் விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Ragging in CMC: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சி.எம்.சி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சி.எம்.சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணபடுத்தி ராகிங் செய்ததாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இறுதி ஆண்டு பயிலும் 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில், பாகாயம் போலீசார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 மாணவர்கள் மீதும் தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. இன்று இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சி.எம்.சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கல்லூரியில் ராகிங் குறித்து புகார் வந்ததும், கல்லூரி முதல்வர், விடுதி வார்டன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணையில் ராகிங்கில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட ஏழு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக காவல் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் விளக்கம் அளித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான தொடர் விசாரணையில் ஏழு மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் சட்டப்படி கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும், கல்லூரியின் கொள்கை விளக்க குறிப்பிலும், ராகிங்கை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், ராகிங் தடுப்பு சட்டங்கள் பின்பற்றப்படுவதாகவும் நீதிபதிகள் முன்பு சி.எம்.சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
மேலும் படிக்க: ராகிங்கிற்கு எதிராக யுஜிசி எடுத்த அதிரடி முடிவு!
இதையடுத்து, பெயர் பெற்ற கல்வி நிறுவனமான சி.எம்.சி-யில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுக்க வேண்டியது யார் பொறுப்பு? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு இதுசம்பந்தமாக விசாரணை நடந்து வருவதாகவும், அதன் அடிப்படையில் பொறுப்பானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சி.எம்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் என்பது முக்கியம் எனவும், ஒழுக்கம் இல்லாமல், மாணவர்கள் தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சி.எம்.சி மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
மேலும் படிக்க: சென்னையில் பாஸ்ட்புட் சாப்பிட்ட மாணவர் உயிரிழப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ