பெரியார் சிலை குறித்து பேசிய கனல்கண்ணன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசிய கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியிருந்தார். இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமென பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | அண்ணா சாலையும், கருணாநிதி சிலையும்.! - 47 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன ?
தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக இந்து மத கடவுள்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராக பல வீடியோ பதிவுகள் பதிவிடப்படுவதாகவும், அவை தொடர்பாக தனி நபர்களும், அமைப்புகளும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மனு நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கனல் கண்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், மனுதாரர் பேசியது, நாட்டின் எந்த சட்டத்துக்கு எதிரானது அல்ல என்றும், அந்த சிலையை அகற்றக்கோரி, ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டார். சிலையை நிறுவிய நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், மனுதாரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், சிலையை உடைக்கப் போவதாக கூறவில்லை என்றும், மாறாக, சிலையை அகற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கைதான் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது ஒன்றும் தீங்கானது அல்ல என்றும், எந்த குற்றமும் செய்யவில்லை. எனவே முன் ஜாமின் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி,கனல் கண்ணன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது என்றும்,மதங்களை குறுப்பிட்டு பேசியுள்ளார் என்றும், இரு தரப்பினர் இடையே மத மோதல், பகைமை, மற்றும் வெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டார். அவர் பேசிய வீடியோவை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரின் விபரங்கள் கேட்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது தலைமறைவாகியுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டது. பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதால், கனல் கண்ணனை கைது செய்து, விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்பதால், முன் ஜாமின் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஜாமின் கோரிய கனல் கண்ணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ