தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் இருந்து வன உயிரினங்கள் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம், ஆற்று படுகையை பேணுதல், நீர் வள பாதுகாப்பு சார்ந்து பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 17 பறவைகள் மற்றும் வன விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளன. இதனை பராமரிக்கவும், திட்ட விரிவாக்கத்திற்காகவும் மாநில அரசுகள் தொடர்ந்து நிதி ஒதுக்கி வருகின்றன.  அதுமட்டுமின்றி, திமுக அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு சுற்றுச்சூழல் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக, ஆட்சிப் பொறுப்பேற்றதும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் பெயரை சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை என்ற பெயரில் மாற்றியமைத்து தனது இலக்கு எதை நோக்கியது என்பதையும், அதுசார்ந்து எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் குறித்த தெளிவையும் தமிழ்நாடு அரசு வரையறுத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்:


முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சுற்றுச்சூழல் ரீதியிலான முக்கிய முன்னெடுப்பில் ஒன்று, 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' (TNGCC) என்ற லாப நோக்கமற்ற நிறுவத்தை அமைத்ததுதான் என்றே கூறலாம். தமிழ்நாட்டில் மரம் நடுதலை அதிகப்படுத்தி காடுகளின் பரப்பை விரிவுப்படுத்தல் இந்த நிறுவனத்தின் நோக்கங்களுள் ஒன்று. அதாவது, தற்போதுள்ள 23.7 விழுக்காடு காடுகள் பரப்பளவை, தமிழ்நாடு பணி என்ற அடிப்படையில் அடுத்த 10 ஆண்டுகளில் 33 விழுக்காடாக உயர்த்த மரங்கள் நடும் பணியை மேற்கொள்வதை இலக்காக வைத்து செயல்படுகிறது. 


மேலும் படிக்க | ’கம்பி கட்டும் கதைகளை சொல்ல வேண்டாம்’ அண்ணாமலையை விளாசிய அமைச்சர் செந்தில் பாலாஜி


சதுப்பு நிலத்தை பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைத்தல், கரியமில வாயு அளவை குறைத்தல், தமிழ்நாட்டில் பூஜ்ஜியம் கார்பன் என்ற நிலையை உருவாக்குவது போன்றவை இந்த நிறுவனத்தின் குறிக்கோளாகும். சுருக்கமாக, பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநில மாற்ற இயக்கம் ஆகிய முக்கிய திட்டங்களை உள்ளடக்கியே தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் உருவாக்கப்பட்டது.  மேலும், சமீபத்தில் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், 2023இல் ஜி20 அமைப்பில் இந்தியா தலைமையேற்றதை அடுத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்திலும், இந்தியாவிற்கே முன்னோடியாக காலநிலையை கையாளவும், இயற்கை பாதுகாப்பு அமைப்புகளை நிர்வாகிக்கவும் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் முன்னிலையில் பேசியிருந்தார். 


பசுமை தமிழ்நாடு:


கல்வித்துறை, தனியார் துறை, சமூகம் சார் அமைப்புகளை உள்ளடக்கி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலையான மற்றும் மீள் கட்டுமான உட்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றில் ஈடுபடுத்துவது தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் பணிகளாகும். காடுகளை பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 விழுக்காடாக மாற்ற திட்டத்தை செயல்படுத்தி அதனை கணக்காணிப்பு பணிகளையும் அந்த நிறுவனம் மேற்கொள்ளும். அதன் ஒருபடியாக, கடந்த டிச. 22ஆம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் 6 லட்சம் மரக்கன்றுகள் இரண்டு மணிநேரங்களில் நடப்பட்டு உலக சாதனை செய்யப்பட்டது.  இது, தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டது. 


காலநிலை மாற்ற நிர்வாக குழு:


காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்துக்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல்திட்டத்தை உருவாக்க அரசு முடிவுசெய்தது.  அதை செயல்படுத்துவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை அமைக்கவும் அரசு முடிவு செய்தது. தொடர்ந்து, இந்த நிர்வாகக் குழுவானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும். 


இக்குழுவில் பொருளாதார வல்லுநர் மான்டேக் சிங் அலுவாலியா, இன்ஃபோசிஸ் நிறுவனரும் தலைவருமான நந்தன் எம்.நிலேகனி, ஐ.நா. சபை முன்னாள் துணை பொதுச் செயலர் எரிக் எஸ்.சோல்ஹிம், நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மைய நிறுவனரும் இயக்குநருமான ரமேஷ் ராமச்சந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜா ஆகியோர் சிறப்பு உறுப்பினர்களாக உள்ளனர். அரசு துறை அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கேற்ப கூடி, தங்களின் குறிக்கோள்களை எட்டுவதற்கான செயல்பாடுகளை வகுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | ஹெல்மெட் அணியாமல் போனால் அவ்வளவுதான் - காவல் துறையினருக்கு டிஜிபி எச்சரிக்கை


தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்:


கடந்த டிச. 9ஆம் தேதி, தமிழ்நாடு காலநிலை மாற்ற மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத்தக்க மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்குரிய வழிவகைகள் குறித்து தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக்குழு, அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.  அதில், கடற்கரைக்களுக்கான நீலக்கொடி சான்றிதழ் திட்டம், திறன்மிகு கிராமங்கள் திட்டம், பசுமை புத்தாய்வுத் திட்டம், பசுமைத் தொன்மங்கள் திட்டம், பசுமை பள்ளிகள் திட்டம் ஆகியவை குறித்து விவரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. 


புதிய சரணாலயங்கள்:


திமுக அரசு கடந்த ஓராண்டில், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களை இணைத்து 'கழுவேலி பறவைகள் சரணாலயம்'; திருப்பூர் மாவட்டத்தில் 'நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்'; கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் மாவட்டங்களை உள்ளடக்கிய 'கடவூர் தேவாங்கு சரணாலயம்'; தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய 'கடற்பசு பாதுகாப்பகம்'; கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை இணைத்து 'காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம்' போன்றவற்றை வன உயிரின பாதுகாப்புச்சட்டம், 1972-இன்கீழ் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்துள்ளது. 


இதில், கரூர் மற்றும் திண்டுக்கல்லில் அமைய உள்ள கடவூர் தேவாங்கு சரணாலயம் என்பது, இந்தியாவில் தேவாங்குக்கு என்று தொடங்கப்படும் முதல் சரணாலயமாகும். மேலும், காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் என்பது காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் பெரும் பாதுகாப்பு பகுதியாக அமைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகில் தற்போது பெரும் பிரச்னையாக பார்க்கப்படும் பூமி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றை எதிர்க்கவும், நீண்டகால பலனை தருவதற்கு தொடர்ச்சியான பங்களிப்பையும் வழங்கவும் தற்போதைய திமுக அரசு செயலாற்றி வருகிறது. 'பல்லுயிர் ஓம்புதல்' என்ற வள்ளுவரின் வாக்குதான் மேற்கூறிய அனைத்து திட்டத்திற்குமான அடிப்படையாக அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கோவையில் இதுவரை 1.32 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ