சென்னை: நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் தலைநகரமான சென்னையில் கொரோனா வைரஸ் கடுமையாக பாதித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் 24 மணி நேரமும் போராடி வருகின்றன. அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 2570 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, "அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 டாக்டர்கள், 2323 நர்ஸ்ககள், 1508 ஆய்வக டெக்னீசியன்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். 


இதனை தொடர்ந்து, 6 மாத காலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2570 நர்ஸ்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் ஆணை பெற்று 3 தினங்களுக்குள், பணியில் சேர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 


மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்கள். தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்கள் பணியமர்த்தப்படுவர். இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும். 


இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உத்தரவில் கூறியுள்ளார்.