சென்னை: 10 மாவட்டங்களை சேர்ந்த 11-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதற்கட்டமாக விலையில்லா மிதிவண்டிகளை 9 பேருக்கு வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,  


நேற்று தலைமைச் செயலகத்தில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 10 மாவட்டங்களின் 11-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு 2019-20 ஆம் கல்வியாண்டிற்கு முதற்கட்டமாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக
9 பேருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்கள்.


தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002 ஆம் கல்வி ஆண்டில் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது. பின்பு, 2005-2006 ஆம் ஆண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.


முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, 11 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை சீரிய முறையில் தொடர்ந்து செயல்படுத்திடும் விதமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய
10 மாவட்டங்களின் 11-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு 2019-20 ஆம் கல்வியாண்டிற்கு முதற்கட்டமாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக முதலமைச்சர் கே. பழனிசாமி அவர்கள் இன்று 9 மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்கள்.


இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, தலைமைச் செயலாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.