சாம்பாரில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்
திருப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூா் காங்கயம் சாலை ராக்கியாபாளையத்தைச் சோ்ந்தவா் கேசவன். இவா் தனது குடும்பத்தினருடன் உணவருந்த திருப்பூா் குமரன் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல அசைவ உணவகமான மயூரா ஹோட்டலுக்கு திங்கள்கிழமை சென்றுள்ளாா். அப்போது அங்கு உணவருந்தியபோது அவர்கள் வாங்கிய சாம்பாரில் கரப்பான்பூச்சி இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.
இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது, அவா்கள் முறையான பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த கேசவன் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு!
இந்தத் தகவலின்பேரில் திருப்பூா் மாநகராட்சி தெற்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர் ரவி உணவகத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினா். இதில், சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, உணவகத்தில் இருந்த சாம்பார், புளிக்குழம்பு, ரசம் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளார். மேலும், பகுப்பாய்வின் முடிவின் அடிப்படையில் கடை உரிமையாளார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.