தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று சேலம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் நடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் ரகுபதி, பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


இதில், சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள வழக்கறிஞர்கள் சட்டத்திருத்தம் தொடர்பாகவும், இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்திய 10 மாவட்ட சங்கங்களுக்கு பார் கவுன்சில் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியது தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதைதொடர்ந்து தலைவர் பரமசிவம் பத்திரிக்கையாளரிடம் கூறியதாவது:- சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள வழக்கறிஞர்கள் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை முதல் வருகிற 17-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.இந்த போராட்டத்திற்கு பின்னரும் சட்ட திருத்தம் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வரவில்லை எனில் வருகிற 19-ம் தேதி அடுத்த கட்ட போராட்டம் குறித்து விவாதிக்கப்படும். இந்த மாதம் நடைபெற இருந்த தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தல் சில காரணங்களுக்காக அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.