மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனத்த மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நடூர் ஏடிக்காலனி பகுதியில் இன்று அதிகாலையில் கருங்கல் சுற்றுச் சுவர் இடிந்து, வீட்டில் உறங்கி கொண்டிருந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ள  துயரச் சம்பவம் பேரதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மண்ணில் புதைந்து உயிரிழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.


இறந்து போன தலித் மக்கள் குடியிருப்புக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வசதிபடைத்த பங்களாவின் காம்ப்வுண்ட் சுவர் இடிந்து விழுந்து இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆபத்து குறித்து அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே, இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், விபத்திற்கு காரணமான பங்களா உரிமையாளர் மற்றும் கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இடிந்து விழுந்த கருங்கல் சுவரின் மீதமுள்ள பகுதியை முழுமையாக அகற்றிட வேண்டுமெனவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.