வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘பானி’ புயலாக மாறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு, வங்கதேசம் தேர்வு செய்துள்ள ஃபோனி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 


தென்கிழக்கு வங்க கடலில், வியாழக்கிழமையன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து, வெள்ளிக்கிழமை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. சனிக்கிழமை, அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்த நிலையில், புயலாக மாறியிருக்கிறது. 


இந்த புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் இன்று ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்க கடலுக்கும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. கடலூர், புதுச்சேரி, பாம்பன், துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடற்கரையோரம் உள்ள படகுகளை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.