போயஸ் தோட்டம்: ஜெ., இல்லத்திற்குள் செல்ல தீபாவிற்கு மறுப்பு!
சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா திடீரென வந்து உள்ளார்.
போயஸ் தோட்டத்திற்கு சென்ற ஜெ.தீபா ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர், போயஸ் கார்டன் வீட்டிற்கு உரிமைகொண்டாடி வருகின்றனர்.
இதில், தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி, அரசியலில் இறங்கியுள்ளார். அவரது சகோதரர் தீபக், தற்போது சசிகலாவின் ஆதரவாளராக உள்ளார். மேலும் அவர் போயஸ் கார்டனில் வசிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை திடீரென தீபா தனது ஆதரவாளர்களுடன் போயஸ் தோட்டத்திற்கு வந்தார். அங்குள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்குள் அவர் நுழைய முயற்சிக்கவே, சசிகலாவின் ஆதரவாளர்கள் திரண்டுவந்து, வழி மறித்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் தீபாவின் கணவர் மாதவனும் போயஸ் தோட்டத்திற்கு வந்து உள்ளார்.
என் சகோதரர் தீபக் அழைத்ததால் போயஸ் கார்டன் வந்தேன், ஜெயலலிதா படத்திற்கு பூஜை செய்ய தீபக் தான் அழைத்தார் என ஜெ. தீபா கூறியுள்ளார். போயஸ் கார்டன் இல்லம் அருகே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தினகரன் தரப்பினர் உள்ளே செல்லவிடாமல் தடுப்பதாக தீபா தரப்பினர் குற்றம் சாட்டிஉள்ளனர். செய்தியாளர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது என போலீஸ் தடுத்து நிறுத்தி உள்ளது.