புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்துவது ஆபத்தானது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்போது தேர்தலில் ST பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து பல இடையூறுகளை சந்தித்து இதுவரையிலும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.


இதனிடையே உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே காலதாமதம் செய்வதாகவும், எனவே நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஜெயசுசிங் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் திங்களன்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.


விசாரணையின் போது மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மன், “உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு சில பணிகள் செய்ய வேண்டி உள்ளது. எனவே மேலும் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுகிறது” என கோரிக்கை விடுத்தார்.


ஆனால் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்கவில்லை. ஏற்கனவே நீங்கள் ஒரு மாத கால அவகாசம் வாங்கி விட்டீர்கள் என எச்சரித்தது. அதன்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக்மனு சிங்வி வாதாடுகையில், “தொகுதி வரையறை இன்னமும் முடியவில்லை. 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை இதுவரை செய்யப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதற்காக வேண்டும் என்றே மாநில தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.


இதுபற்றி மாநில தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் விசாரித்தனர். அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய வக்கீல், “தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு உள்ளன. திட்டமிட்டபடி தேர்தல் தேதி அட்டவணை அறிவிப்பு ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.


மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த தகவலை உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.


இதையடுத்து டிசம்பர் 2-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. என்றபோதிலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதற்கு வேண்டுமென்றே தேர்தல் ஆணையம் தாமதம் காட்டி வருகிறது. அதற்கு ஏதுவாக தற்போது புதிய மாவட்டங்களின் உருவாக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.



இந்நிலையில் தற்போது புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துவது ஆபத்தானது என பாமக நிறுவனர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனதுட்விட்டர் பக்கதில் குறிப்பிடுகையில்., "5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும்!" என குறிப்பிட்டுள்ளார்.