முதல்வர் பழனிசாமிக்கு பதிலாக சபாநாயகர் தனபால் - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.
முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக-வில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. ஒன்று சசிகலா அணி, மற்றொன்று ஓபிஎஸ் அணி. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். பிறகு தினகரன் தனிமைபடுத்தப்பட்டார்.
தற்போது அதிமுக தினகரன் அணி, ஓபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணி என மூன்று அணிகளாக பிரிந்தன. இந்நிலையில், கடந்த 21-ம் தேதி இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி இணைந்தன. மேலும் அன்று மாலை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வராகவும், ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாஃபோ பாண்டியராஜன் தொல்லியல்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்கள்.
அதிமுக-வில் இருந்து தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டதால், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் ஆத்திரமடைந்து முதல்வரை மாற்றுங்கள் என கூறி வருகின்றனர். இதனையடுத்து அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.
இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநருக்கு எதிர்கட்சி ஸ்டாலின் உட்பட பல கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொத்தம் அதிமுக 135 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் 116 எம்எல்ஏக்களும், தினகரன் அணியில் 19 எம்எல்ஏக்களும் உள்ளனர். பெரும்பான்மை நிருபிக்க மொத்தம் 117 எம்எல்ஏக்கள் தேவை. எனவே எடப்பாடி பழனிச்சாமி அணி பெரும்பான்மை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் வைக்கப்பட்டு உள்ளனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் இன்று செய்தியளார்களிடம் பேசுகையில், நாங்கள் யாரையும் மிரட்ட வில்லை. அதேவேளையில் நாங்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை.முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு பதிலாக சபாநாயகர் தனபாலுவை முதல்-அமைச்சராக நியமிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை எனக் கூறினார்.