பணப்பட்டுவாடா:தலைமை தேர்தல் கமிஷனுடன் விக்ரம்பத்ரா முக்கிய ஆலோசனை
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.88 கோடி வழங்கப்பட்டதற்கான ஆவணங்களை வருமான வரித் துறை கைப்பற்றியுள்ளதாக நேற்று மாலை செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக தனி தேர்தல் அதிகாரி விக்ரம்பத்ரா நேற்று மாலை அவசரமாக டெல்லி சென்றார். இன்று தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி சந்தித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்து வருகின்றார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, தனியார் விடுதி உட்பட பல இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
இதில் சட்ட விரோத பணப் பரிமாற்றத்துக்கான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. குறிப்பாக வாக்களர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் வழங்க பட்டதற்கான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாயின.
குறிப்பாக பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பான ஆவணங்கள் குறித்து ஆலோசிக்கவே தமிழக தனி தேர்தல் அதிகாரி விக்ரம்பத்ரா டெல்லி சென்றதாக தகவல் வந்துள்ளன.
தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா செய்த ஆவணங்கள் கிடைத்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இது போல் ஆர்.கே.நகர்., தேர்தலும் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.