தமிழகத்தை பொறுத்தவரை வரும் மக்களவை தேர்தலையொட்டி கூட்டணி குறித்து பேச்சுவாரத்தைகள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது. எந்த கட்சி யாருடன் கூட்டணி? கூட்டணியில் எத்தனை இடங்கள் ஒதுக்கீடு? என்ற உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் இருந்த நிலையில், திமுக தரப்பில் இருந்து கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டதில் இறுதி முடிவாகிவிட்டது. திமுக தொகுதி பங்கீடு நிறைவடைந்து விட்டதாக நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். திமுக கூட்டணியில் மொத்தம் எட்டு கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறத்தில் ஆளும் கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர்க்க தேமுதிகவுடம் இன்னும் பேச்சுவாரத்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே அதிமுக, பாஜக, பாமக, புதிய தமிழகம், என்.ஆர். காங்கிரஸ் என கூட்டணி அமைத்து உள்ளது. ஆனால் நீண்ட நாட்களாக அதிமுக மற்றும் பாஜக தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவாரத்தைகள் நடத்தி வருகிறது. நேற்று இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தேமுதிக மற்றும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


ஆனால் நேற்று தேமுதிகவைச் சேர்ந்தமாவட்டச் செயலாளர்களான அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு தலைவர் துரைமுருகனை சந்தித்துப் பேசினர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.


இதுக்குறித்து பேசிய DMDK துணை பொதுச்செயலாளர் சுதீஷ், திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திற்கு அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் சென்றது அவர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே. அதில் அரசியல் காரணங்கள் இல்லை. அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை முடிவாகிவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று சுதீஷ் கூறினார்.


DMDK ஆரம்பத்தில் AIADMK மற்றும் DMK உடன் பேச்சுவாரத்தை நடத்தி வந்தது. தேமுதிகவின் கோரிக்கை அதிகமாக இருந்ததால் தி.மு.க. விலகிக் கொண்டது. ஆனால் அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. அதிமுக தரப்பில் நான்கு மக்களவை தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் தேமுதிக தரப்பில் பாமகவுக்கு ஒதுக்கியது போல ஏழு மக்களவை இடங்களும், ஒரு ராஜ்ய சபா இடமும் கேட்பதாகத் தெரிகிறது. இதனால் தான் கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது என தகவல்கள் வந்துள்ளது.