எந்த விசாரணை கமிஷனையும் சந்திக்க திமுக தயார் - RS பாரதி!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீப காலமாக பொறுப்பற்ற முறையில் தாம் வகிக்கும் பதவிக்கு குந்தகமும் இழுக்கும் ஏற்படும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீப காலமாக பொறுப்பற்ற முறையில் தாம் வகிக்கும் பதவிக்கு குந்தகமும் இழுக்கும் ஏற்படும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீப காலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய நாள் முதல் அவர் செல்லும் இடமெங்கும் மக்கள் அவருக்கு அளிக்கும் ஆதரவும், வரவேற்பையும் கண்டு தாங்க முடியாமல், தான் ஒரு முதலமைச்சர் என்பதையும் மறந்து பொறுப்பற்ற முறையில் தாம் வகிக்கும் பதவிக்கு குந்தகமும் இழுக்கும் ஏற்படும் வகையில் அவரது தேர்தல் பிரச்சார உரைகள் அமைந்துள்ளன.
தலைவர் தளபதி அவர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் எடப்பாடி மீதும் அவரது அமைச்சர்கள் மீதும் அடுக்கடுக்கான ஊழல் புகார்களை ஆதாரத்தோடு நிரூபிக்கும் வகையில் வைக்கும் வாதங்களுக்கு பதில் சொல்ல துப்பற்ற, திராணியற்ற எடப்பாடி பழனிசாமி மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பேசி வருகிறார்.
கொடநாட்டில் நடைபெற்ற கொலை குறித்து இவர்மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை தர இயலாத எடப்பாடி ஏற்கனவே சி.பி.ஐ.யால் (ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே, தீவிரமாக விசாரிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்ப்ட்டு இருக்கிறது) என்பதுகூட ஒரு முதலமைச்சருக்கு தெரியவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. ஏதோ இவர் ஜெயலலிதாவைவிட தன்னை புத்திசாலியாக நினைத்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் சாதிக்பாட்ஷா மரணத்தை குறித்து விசாரணை நடத்துவேன் என்று சொல்கிறார். விசாரணை கமிஷன்களை கண்டு எந்த காலத்திலும் அஞ்சாத ஒரு இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை எடப்பாடிக்கு தெரியா விட்டால் தெரிந்தவர்களை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
இவர் விசாரணை நடத்தும் முன்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இவர்மீது சுமார் ரூபாய் 3,500 கோடி அளவுக்கு ஊழலுக்கு உரிய முகாந்திரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், வீரம் பேசும் எடப்பாடி ஓடோடிச் சென்று அதற்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளார். இதிலிருந்தே இவர் எவ்வளவு பெரிய யோக்கியர் என்று நாட்டு மக்களுக்கு தெரியும்.
கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. “யோக்கியன் வருகிறான்... சொம்பை எடுத்து உள்ளே வை” என்று சொல்வதைப் போல, இவர் செல்லும் இடமெல்லாம் காலி ரோட்டையும், மரங்களையும் பார்த்துக் கொண்டு செல்வதைப் பார்த்தால், இந்த பழமொழி இவருக்குப் பொருத்தமானது எனத் தோன்றுகிறது.
எடப்பாடியும் அவரது சகாக்களும், எப்படிப்பட்டவர்கள் என்பதை திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் நீதிமன்றம் கூறியிருக்கும் தீர்ப்பை பார்த்தால் இதுவரை எடப்பாடியின் கூட்டம் ஊரை அடித்து உலையில் போடும் ஊழல் பேர்வழிகள், கொள்ளையர்கள், கொலைக்காரர்கள் என்ற பெருமைக்குரியவர்களாக இருந்தவர்களை ஃபோர்ஜரி (மோசடி பேர் வழி) மேலும் ஒரு பட்டையத்தோடு பவனி வருகிறார்கள். நிலைமை இப்படி இருக்க, சாதிக்பாட்ஷா மரணம் குறித்து விசாரிக்க போவதாக மிரட்டல் விடுவதைக் கண்டு தி.மு.கழகம் ஒருபோதும் அஞ்சவும் இல்லை - இதுவரை தி.மு.க.மீது போடப்பட்ட பொய் வழக்குகளை, அத்தனை வழக்கிலும் வென்று காட்டிய பெருமை தி.மு.கழகத்திற்கு மட்டுமே உண்டு. எந்த விசாரணை கமிஷனையும் தி.மு.க. சந்திக்க தயார்!" என குறிப்பிட்டுள்ளார்.