திருவாரூர் இடைத்தேர்தல்: தங்கள் வேட்பாளரை அறிவித்த திமுக
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தங்கள் வேட்பாளரை குறித்து திமுக அறிவிப்பு.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் சனவரி 3 ஆம் தேதி முதல் சனவரி 10 ஆம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி எனவும், திருவாரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இதனையடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் யாரை நிறுத்தலாம்? என்று அனைத்து கட்சிகளும் ஆலோசனை செய்து வருகிறது. புதிய கட்சிகளும், சிறிய கட்சிகளும் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பது குறித்து மவுனம் காத்து வந்தது.
திமுகவின் சட்டமன்ற தொகுதியான திருவாரூரில், திமுக சார்பில் யாரை? நிறுத்தப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்று மாலை திமுக நேர்காணல் முடிந்ததும், திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இன்று பிற்பகலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.