பெரியார் சிலை சேதம்: மதவெறி செயல்களை ஒட்ட நறுக்க வேண்டும் -ஸ்டாலின்
பெரியார் சிலை சேதம் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
இன்று பெரியார் பிறந்த தினம். அவரது 140வது பிறந்த நாளை உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சிம்சன் அருகில் இருக்கும் பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்டது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள், காலனி வீசிய நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதேபோல திருப்பூரில் உள்ள பெரியார் சிலை அடையாளம் தெரியாத சில நபர்களால் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதுக்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெரியார் சிலை சேதம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கூறியதாவது:
சுயமரியாதை வெளிச்சம் பாய்ச்சிய தந்தை பெரியார் அவர்களுக்கு தமிழ்நாடே நன்றி செலுத்துகிற நேரத்தில்,
சமூகநீதிக் கொள்கையை தகர்த்து, ஒற்றுமை உணர்வை குலைத்து - மதவாதப் பேயாட்டம் ஆட நினைக்கும் மூடர்கள் பெரியார் அவர்களின் சிலையை அவமானப்படுத்த முயற்சித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது!
மதவெறி சக்திகளின் பின்னணியில் இதுபோன்ற இழிவான - தரங்கெட்ட செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை ஒட்ட நறுக்க வேண்டியது நம் கடமை!
ஆகவே, உடனடியாக அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதோடு, இதன் பின்னணியில் இருக்கும் அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.